இளையோர் ஒலிம்பிக் போட்டி: இந்திய வீராங்கனைக்கு வெள்ளிப்பதக்கம்
இளையோர் ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீராங்கனைக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
பியூனஸ் அயர்ஸ்,
3-வது இளையோர் (யூத்) ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. 206 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் இந்தியா சார்பில் 47 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான ஜூடோ போட்டியின் 44 கிலோ உடல் எடைப்பிரிவில் இறுதிபோட்டியில் இந்திய வீராங்கனை தங்ஜம் தபாபி தேவி 0-11 என்ற புள்ளி கணக்கில் வெனிசுலா வீராங்கனை மரியா கிமின்சிடம் தோல்வி கண்டார். இதனால் தங்ஜம் தபாபி தேவி வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திபட வேண்டியதானது. வெள்ளிப்பதக்கம் வென்ற தங்ஜம் தபாபி தேவி மணிப்பூரை சேர்ந்தவர்.
ஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பந்தயத்தில் இந்தியர் ஒருவர் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். முன்னதாக நடந்த துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் இந்திய வீரர் துஷர் மானே 247.5 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். ரஷிய வீரர் கிரிகோரி ஷமாகோவ் 249.2 புள்ளிகளுடன் தங்கப்பதக்கமும், செர்பியா வீரர் அலெக்சா மிட்ரோவிச் 227.7 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.