கோவில்பட்டியில் கூட்டு சங்க தேர்தல் பிரச்சினை – அதிகாரியை சிறைபிடிக்க முயற்சி
கோவில்பட்டியில் கூட்டு சங்க தேர்தல் பிரச்சினை – அதிகாரியை சிறைபிடிக்க முயற்சி – சாலை மறியல் பரபரப்பு
கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஆறாம் தேதி நடைபெற்றது. நேற்று வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டது. வேட்புமனு பரிசீலனை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து திமுக, மதிமுக , காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினை சேர்ந்தவர்கள் தேர்தல் அலுவலர் சுப்பையாவை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 44 வேட்பாளர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் ஒட்டப்பட்டது. இன்று காலையில் வேட்புமனு வாபஸ் பெறலாம்என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெருமாள் என்ற வேட்பாளர் வேட்புமனு வாபஸ் பெறச் சென்றபோது , தேர்தல் அலுவலர் மனுவை வாபஸ் பெற மறுத்து விட்டதாக கூறி கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கிடையில் நேற்று ஒட்டப்பட்ட 44 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் 11 பேர் தவிர மற்றவர்கள் மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் சுப்பையா தகவல் பலகையில் ஒட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மற்ற வேட்பாளர்கள் அவரது அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அலுவலத்திலிருந்து வெளியே செல்ல முயன்ற தேர்தல் அலுவலர் சுப்பையாவை மற்ற வேட்பாளர்கள், அவர்களுடைய ஆதரவாளர்கள் சிறைபிடிக்க முயற்சி செய்த காரணத்தினால், காவல்துறையினர் அவரை பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறை வாகனம் முன்பு படுத்துக்கொண்டு செல்ல விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தேர்தல் அலுவலர் சுப்பையாவை மீண்டும் வாகனத்துடன் உள்ளே அழைத்துச் சென்றனர். தேர்தல் அலுவலரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்தல் அலுவலரின் முடிவே இறுதியானது, வேண்டுமென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்டரீதியாக சந்திக்குமாறு அறிவுறுத்தியை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.