பாலியல் தொல்லைக்கு எதிராக இந்தி பட உலகில் வரிந்து கட்டும் நடிகைகள்
நடிகை தனுஸ்ரீதத்தா பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறினார். இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர் சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகியோர் மீது தனுஸ்ரீதத்தா போலீசிலும் புகார் செய்தார். நானா படேகர் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனுஸ்ரீதத்தாவுக்கு பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, டாப்சி உள்பட பல நடிகைகள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத்தும் குயின் பட இயக்குனர் விகாஸ் பாஹல் மீது பாலியல் புகார் கூறி உள்ளார்.
அவர் கூறும்போது, படப்பிடிப்பில் விகாஸ் பாஹல் என்னை சந்திக்கும்போதெல்லாம் இறுக்கி கட்டிப்பிடித்துக்கொள்வார். என் கழுத்தில் அவரது முகத்தை புதைத்து என் தலைமுடி வாசனையை நுகர்வார். பிறகு உங்கள் வாசனையை விரும்புகிறேன் என்பார்’’ என்றார்.
இந்த நிலையில் இன்னொரு மாடல் அழகி, இந்தி இயக்குனரும் நடிகருமான ரஜத் கபூர் மீது பாலியல் புகார் தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, ‘‘ரஜத் கபூர் அவரது நண்பர் போனில் இருந்து அடிக்கடி என்னை அழைத்து உங்களை தனியாக வைத்து வீட்டில் படம்பிடிக்க வேண்டும் என்று தொல்லை கொடுத்தார்’’ என்றார். ரஜத் கபூர் வாட்ஸ்–அப் உரையாடலையும் வெளியிட்டார். இதுபோல் மேலும் இரண்டு பெண்களும் அவர் மீது பாலியல் புகார் கூறி இருக்கிறார்கள்
இது பரபரப்பானதை தொடர்ந்து ரஜத் கபூர் மன்னிப்பு கேட்டுள்ளார். ‘‘என் வாழ்நாள் முழுவதும் நல்லதையே செய்து நாகரிகமாக நடந்து கொள்ள முயற்சி செய்தேன். ஆனாலும் எனது வார்த்தை மற்றும் செயலால் தடுமாறி விட்டேன். இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று அவர் கூறியுள்ளார். பாலியல் தொல்லைக்கு எதிராக இந்தி நடிகைகள் வரிந்து கட்டி இறங்கி உள்ளனர்.