பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து பரிசீலனை: தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி பற்றி முடிவு – எடப்பாடி பழனிசாமி
பிரதமர் நரேந்திரமோடியை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்து பேசினார். பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:-பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்களா?
பதில்:-இந்த அரசைப் பொறுத்தவரைக்கும், பல்வேறு துறையில் நிதி ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், போக்குவரத்துத் துறையில், ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன இப்படி பல்வேறு துறைகளிலும் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலே நிதி ஆதாரத்தை உருவாக்கி, நீங்கள் சொல்கின்ற கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி:-அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் புகார் கூறப்பட்டு வருகிறதே? அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:-அமைச்சர்கள் மீது யார் வேண்டுமானாலும் வழக்கு தொடரலாம். ஆனால் வழக்கின் உண்மை தன்மையை தெரிந்து கொள்ள வேண்டும். உண்மை தன்மை தெரியாமல் ஒரு அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினால், யாரும் இங்கு அமைச்சர்களாக இருக்க முடியாது. ஒரு காகிதத்தில் எழுதி கொடுத்து அது தான் உண்மை என்று கூறினால், தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் யாரும் அமைச்சர்களாக இருக்க முடியாது.
அண்மையில் கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தது. இதில் 93 சதவீதம் அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மக்கள் செல்வாக்கு இழந்திருந்தால், அவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்க முடியுமா?. வேண்டுமென்றே ஊடகங்களும், பத்திரிகைகளும் தவறான செய்தியை பரப்பி வருகிறது.
கேள்வி:-ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஜூலை, 2017-ல் டி.டி.வி.தினகரனை சந்தித்தேன் என்று சொல்கிறார், இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? உங்களுக்கு இது தெரியுமா?.
பதில்:-டி.டி.வி.தினகரன் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். துணை முதல்-அமைச்சர் அதற்கு தெளிவான கருத்தை தெரிவித்து விட்டார். அதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவர் தெரிவித்த கருத்திற்கு, துணை முதல்- அமைச்சர் ஊடகங்களை அழைத்து தெளிவான முழு விளக்கத்தை தெரிவித்து விட்டார்.
கேள்வி:-ஸ்டெர்லைட் விவகாரத்தில் வேதாந்த நிறுவனம் குறித்து தமிழக அரசு ஒரு தெளிவான நிலைப்பாட்டை தெரியப்படுத்தவில்லையே?
பதில்:-நான் அடிக்கடி தெளிவுபடுத்திக் கொண்டுதான் இருக்கிறேன். தமிழகத்தில் இருக்கின்ற பொதுமக்கள் பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டமும் தமிழகத்தில் அனுமதிக்கப்படமாட்டாது என்று ஊடகங்கள் வாயிலாகவும், பத்திரிகைகள் வாயிலாகவும் தெளிவுபடுத்தியிருக்கிறேன்.
கேள்வி:-நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி. மு.க. கூட்டணி வைக்குமா?
பதில்:-இன்னும் தேர்தலே அறிவிக்கவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பிறகு, யார் யாருடன் கூட்டணி என்பதை அதற்குத் தக்கவாறு எங்களுடைய கட்சியும் முடிவு செய்யும்.
கேள்வி:-இடைத்தேர்தலை ஒத்தி வைக்கக்காரணம்?
பதில்:-காரணம் தெளிவாக சொல்லி விட்டார்கள். திருப்பரங்குன்றம் சம்பந்தமான வழக்கு ஏற்கனவே கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இது தேர்தல் கமிஷன் முடிவெடுக்கவேண்டியது, நாங்கள் முடிவெடுக்க வேண்டியது அல்ல.
கேள்வி:-காவிரிப்படுகையில் தடுப்பணை கட்டுவது….
பதில்:-காவிரி படுகையில் எந்தவொரு அணை கட்டுவதாக இருந்தாலும் அதற்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் எல்லாம் இசைவு தந்தால் தான் அங்கே அணை கட்ட முடியும். ஆகவே, நாம் கட்டுவதற்கு தயாரானாலும், கர்நாடக அரசு அதற்கு அனுமதி கொடுக்குமா?. இன்றைக்கு மேகதாதுவிலே அணை கட்டவேண்டுமென்று கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிரதமரிடத்திலும் வலியுறுத்திச் சொல்லியிருக்கின்றேன். ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பை வழங்கிவிட்டது. காவிரிப் படுகையிலே கர்நாடக அரசு அணை கட்ட வேண்டுமென்றால் தமிழக அரசினுடைய அனுமதி இல்லாமல் கட்டக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு திட்டத்தை அறிவிக்கும்போது அது நிறைவேறுமா? நிறைவேறாதா என்பதை எல்லாம் பரிசீலித்துத்தான் ஒரு திட்டத்தை அறிவிக்க வேண்டும். இருந்தாலும் நீங்கள் வைக்கின்ற கோரிக்கை அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மேட்டூர் அணைக்கு கீழ்ப்பகுதியில் இருக்கின்ற ஆற்றுப் பகுதியிலே, காவிரி ஆற்றிலே வெள்ளம் அதிகமாக வரும் பொழுது தடுப்பணை கட்டி தண்ணீரை சேமிப்பதற்குண்டான நிலையை ஏற்படுத்த அரசு இப்பொழுது பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. அதற்குண்டான பணியையும் அரசு செய்து கொண்டிருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.