ஐதராபாத் டெஸ்ட்: இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் சேர்ப்பு
ஐதராபாத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை விட இன்னும் 3 ரன்கள் பின் தங்கியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் கவனமாக விளையாடியது. சீரான விளையாட்டை வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் வெளிப்படுத்தினர். 101.4 ஓவர்கள் தாக்கு பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 106 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணியில், இளம் வீரர் பிரித்வி ஷாவும் லோகேஷ் ராகுலும் களம் இறங்கினர். ராகுல் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். எனினும், மறு முனையில் பிரித்வி ஷா, முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாரா 10 ரன்களில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பிரித்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா 53 பந்துகளில் 11 பவுண்டரிகள், 1 சிக்சர் உட்பட 70 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 45 ரன்களில் வெளியேறினார்.
இதையடுத்து, 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரகானே, ரிஷாப் பாண்ட் ஜோடி மேற்கொண்டு விக்கெட்டுகள் எதுவும் விழாமல் பார்த்துக்கொண்டது. 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 81 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை விட இன்னும் 3 ரன்கள் பின் தங்கியுள்ளது.