டெண்டர் முறைகேடு புகார் சி.பி.ஐ. விசாரணை: சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டாக பேட்டி
அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், அ.தி.மு.க. தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை ஆகியோர் நேற்று இரவு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர்கள் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதே?.
பதில்:- எதிர்க்கட்சியை பொறுத்தவரை இந்த வழக்கு விசாரணையை வேகமாக நடத்த வேண்டும் என்று தான் சொன்னார்கள். ஆனால், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஏற்கனவே இந்த விசாரணையை முடித்து ஐகோர்ட்டில் அறிக்கையை வழங்கிவிட்டது. இந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணைக்கு கோர்ட்டு உத்தரவிட்டது தவறு. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம். தவறான ஆணையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தானே பரிகாரமாக இருக்கும்.
கேள்வி:- அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படுமா?.
பதில்:- அரசின் ஒரு பகுதிதானே இது.
கேள்வி:- மேல்முறையீட்டிற்கு எப்போது செல்வீர்கள்?.
பதில்:- இனிமேல் தான்.
கேள்வி:- டெண்டர் முறைகேடு நடந்திருப்பதற்கு போதுமான ஆதாரம் இருப்பதாக சொல்கிறார்களே?.
பதில்:- அது தவறு. ஆதாரம் என்பது உண்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும். ஒட்டன்சத்திரம் – அவினாசி சாலைக்கு 2013-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் மதிப்பு ரூ.10 கோடி தான். நெடுஞ்சாலை டெண்டரில் நிறைய தவறுகள் நடந்ததாக சொல்கிறார்கள். இது வழக்கமான டெண்டர் போல் கிடையாது. உலக வங்கி கொடுத்த வழிகாட்டுதல் படிதான் கொடுக்க முடியும். அதுபற்றி, நீதிமன்றத்தில் விளக்கப்பட்டுள்ளது. மேலும், டெண்டர் எடுத்தவர்களின் பணி ரோட்டை போடுவது மட்டும் அல்ல. அதை 8 ஆண்டு காலம் பராமரிப்பதும் அவர்களது பணி தான். மீண்டும் ரோட்டை அவர்கள் போட்டுக்கொடுக்க வேண்டும். இவை எல்லாமும் சேர்ந்துதான் ஒப்பந்தப் பணியில் வருகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு கிலோ மீட்டர் சாலையை போடுவதற்கு, ரூ.11.21 கோடிக்கும், ரூ.13.85 கோடிக்கும் டெண்டர் கொடுத்துள்ளது. ஆனால், இப்போது போடப்பட்டுள்ளது ஒப்பந்தத்தில், ஒரு கிலோ மீட்டர் சாலை போட ரூ.10 கோடி தான் வழங்கப்படுகிறது.
டெண்டர் முறைகேடு நடந்ததாக சொல்லும் தி.மு.க., 2009-ம் ஆண்டு தங்களின் ஆட்சியில் வண்டலூர் – நெமிலிச்சேரி சாலையை ரூ.33 கோடிக்கு டெண்டர் கொடுத்துள்ளது. இதற்கு சி.பி.ஐ. விசாரணை போட வேண்டும் அல்லவா?. நாங்கள் அதற்கு ஆதாரம் தருகிறோம். அதைப்போலவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மடத்துக்குளம் – பொள்ளாச்சி சாலை பணிகளை கிலோ மீட்டருக்கு ரூ.11.22 கோடிக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கொடுத்துள்ளது. அதன்மீது, ஏன் தி.மு.க. வழக்குப்போடவில்லை. அடிக்க.. அடிக்க.. அம்மிக்கல்லும் நகரும் என்று, சொல்லிய பொய்யை திரும்ப.. திரும்ப.. சொல்கிறார்கள்.
கேள்வி:- இந்த வாதங்களை நீதிமன்றத்தில் எடுத்து வைப்பீர்களா?.
பதில்:- எடுத்து வைத்துள்ளோம். நீங்கள் (ஊடகங்கள்) தான் நீதிமன்றம். நீங்கள் இதை வெளியிடும்போது, மக்களுக்கு உண்மை தெரியும். நாங்கள் நீதிமன்றத்தை குறை சொல்லவில்லை. அனைத்தையும் மேல்முறையீட்டில் பார்த்துக்கொள்கிறோம். தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட டெண்டர்களுக்கு நிறைய ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.
கேள்வி:- முதல்-அமைச்சர் சம்பந்தியின் நிறுவனத்துக்குத்தான் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்று புகார் கூறப்படுகிறதே?.
பதில்:- உறவினர்கள் என்றால் யார்? என்று மத்திய அரசு 1962-ம் ஆண்டிலேயே கூறியுள்ளது. அதாவது, ரத்த உறவுகள், அப்பா, அம்மா, சம்மந்தப்பட்ட அமைச்சர், அவரது மனைவி, மகன், மகள், அமைச்சரின் அண்ணன், தங்கை என்று கூறியுள்ளது. இதில் எதிலும் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டவர் வரவில்லை. நெருங்கிய உறவினர் என்று சொல்வதிலும், மனைவியின் அப்பா, அம்மாவை சேர்ந்தவர்கள். மகனின் மனைவி, மகளின் கணவர், அப்பாவின் 2-வது மனைவி, அவர்களது குழந்தைகள், தத்துப் பையன் என்று இப்படித்தான் வருகிறது. அப்படி பார்க்கும்போது, குற்றம்சாட்டப்பட்டவர் உறவினர் பட்டியலில் வரவில்லை. எனவே, அவர் மீது குற்றச்சாட்டு சொல்ல முடியாது.
உறவினர் அப்படி என்பது, அவர் இருக்கும் பகுதியாக இருக்கட்டும். ஆயிரம் பேர் உறவினர் இருப்பார்கள். டெண்டர் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிலைகளுக்குப் பிறகுதான் டெண்டர் வழங்கப்படும். ஊரில் உள்ள யாருமே டெண்டரில் கலந்து கொள்ளக்கூடாது என்ற சட்டம் இந்தியாவில் இல்லை.
கேள்வி:- அப்படி என்றால், தி.மு.க. ஏன் வழக்கு தொடர்ந்ததாக கருதுகிறீர்கள்?.
பதில்:- தி.மு.க. மீது புதிய தலைமைச் செயலக வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நேரத்தில், உங்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்றை சொல்லப்போகிறோம். இப்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள ராமலிங்கம் நிறுவனத்துக்கு தி.மு.க. ஆட்சி நடைபெற்ற 1997, 1998, 1999, 2007, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் 10-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது ஏன் குற்றச்சாட்டு சொல்கிறார்கள்?. அந்த நிறுவனம் 35 ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை பணிகளை எடுத்து செய்து வருகிறது. 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் குடிசைமாற்று வாரிய ஒப்பந்தம் ரூ.74.5 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
கேள்வி:- டெண்டர் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்றால், சி.பி.ஐ. விசாரணையை சந்திக்க வேண்டியது தானே?.
பதில்:- தி.மு.க. பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுவதை தடுக்கவே மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். ஏற்கனவே, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தனது விசாரணையை முடித்து கோர்ட்டில் அறிக்கையை வழங்கிவிட்டது. முதலில், அந்த அறிக்கை வெளிவரட்டும். அதற்கு முன்னால் மாற்று நடவடிக்கை என்பது சட்ட நடவடிக்கையை மீறுவதாகும். அதனால்தான் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்.
கேள்வி:- அதிகமாக தொகைக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?.
பதில்:- ரூ.700 கோடி அளவுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குக்கும், முதல்-அமைச்சருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை என்பது நீதிமன்ற கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. அன்று சர்க்காரியா கமிஷனை சுப்ரீம் கோர்ட்டு போட்டது. அந்த கமிஷனுக்கு சர்க்காரியா என்ற நீதிபதியையும் நியமித்தது.
எனவே, நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு முறையானதா?, முறையற்றதா? என்பதை நாங்கள் செய்யும் மேல்முறையீட்டில் சுப்ரீம் கோர்ட்டு சொல்லும். இன்னும் நிறைய காலம் இருக்கிறது. எங்களிடம் நிறைய ஆதாரமும் இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் எப்படியெல்லாம் அறிவியல் பூர்வமாக ஊழல் செய்தார்கள்.
மதுரை வட்டச்சாலை பணிக்கு முதலில் ரூ.213 கோடியில் திட்டம் போடப்பட்டது. ஆனால், கூடுதல் தொகை ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். அங்குள்ள விமான நிலைய விரிவாக்கத்தின்போது, பைப் லைன், சாலை வசதி உள்பட நிறைய பணிகள் மாற்றி அமைக்கப்பட வேண்டியிருந்தது. அதனால், அதற் கான செலவும் அதிகரித்தது.
2010-ம் ஆண்டு இதே ராமலிங்கம் கம்பெனிக்கு மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு திட்டத்தின் கீழ் ரூ.306 கோடிக்கு 4 திட்டங்களை கொடுத்துள்ளனர். அதை எல்லாம் இன்றைக்கு மறந்துவிட்டார்கள். ராமலிங்கம் கம்பெனியினர் 35 ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறார்கள். முதல்-அமைச்சருக்கு உறவினர் ஆனது சில காலத்திற்கு முன்புதான். எனவே, அரசியல் காரணங்களுக்காகவும், இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி அரசு நன்றாக செல்வதை தடுக்கவும், அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தவும் இவ்வாறான குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.
தி.மு.க. ஆட்சி காலத்தில், மத்திய மந்திரி சபையில் பெரிய பெரிய பொறுப்புகளை வாங்கினார்கள். இலங்கையில் போர் நிறுத்தம் என்று உண்மைக்கு மாறான தகவலை சொல்லி, பல பேர் இறப்புக்கு காரணமானார்கள். அன்றைக்கு பல ஊழல்களை செய்த அவர்கள் இன்றைக்கு எங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள். நீதிமன்றம் கேட்கும்போது அரசு சார்பில் தி.மு.க. மீதான ஆதாரத்தை கொடுப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.