முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நல குறைவால் காலமானார்
தி.மு.க. முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல் நல குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 58.
தி.மு.க. ஆட்சியில் இருந்தபொழுது கடந்த 1996-2001ம் ஆண்டுகளில் சட்டசபை துணை சபாநாயகராக அவர் பதவி வகித்துள்ளார். அதன்பின்னர் தி.மு.க. ஆட்சியில் இருந்த 2006-2011ம் ஆண்டுகளில் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சராக இருந்துள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2013ல் தி.மு.க.வில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அவரை எழும்பூர் தொகுதியில் ஜெயலலிதா நிற்க வைத்தார். ஆனால் அவர் ரவிச்சந்திரன் என்ற தி.மு.க. வேட்பாளரிடம் தோற்றுப்போனார்.
ஜெயலலிதா மறைந்த பின்னர் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்ட நிலையில் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக அவரது அணியில் இருந்தார். அதன்பின்னர் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்பதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் அவர் அ.மு.ம.க.வில் இருந்தார்.
இந்நிலையில், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் உடல்நல குறைவால் இன்று காலமானார்.