கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்த பெண் மீது ஆசிட் வீச்சு
சேலம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள எஸ்.பாலம் பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன், ஆட்டோ டிரைவர்.
இவரும், குகை லோகுசெட்டி தெருவை சேர்ந்த காயத்திரி (வயது 31) என்பவரும் காதலித்து கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகன் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். 2-வது மகன் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்த நிலையில் பாலமுருகனுக்கும், காயத்திரிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு, காயத்திரி வீட்டை விட்டு வெளியேறி குழந்தைகளுடன் குகை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இன்று காலை 9 மணிக்கு 2 மகன்களையும் பள்ளியில் விடுவதற்காக காயத்திரி மொபட்டில் அழைத்துக் கொண்டு சென்றார். அவர் குகை மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது, மர்ம நபர் ஒருவர் திடீரென மொபட்டை வழிமறித்து காயத்திரியின் முகத்தில் ஆசிட்டை வீசினார்.
இதில் காயத்திரியின் முகத்தின் வலது பக்கம், நெஞ்சு பகுதி, கால் பகுதி வெந்தது. பொதுமக்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து காயத்திரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், காயத்திரி மீது ஆசிட் வீசியவர் பக்கத்து தெருவை சேர்ந்த மரம் அறுக்கும் தொழிலாளி சீனிவாசன்(40) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
பக்கத்து தெரு என்பதால், சீனிவாசனுக்கும், காயத்திரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த காயத்திரியின் பெற்றோர், உறவினர்கள் கண்டித்தனர். சீனிவாசனுடன் பேசக்கூடாது என்று கூறினர். இதையடுத்து காயத்திரியும் சீனிவாசனுடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சீனிவாசன் ஒரு கேனில் ஆசிட்டை வாங்கிக் கொண்டு வந்து காயத்திரியின் முகத்தில் வீசியது தெரியவந்துள்ளது.
தலைமறைவாக உள்ள சீனிவாசனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.