சென்னையில், போதை நபர்கள் விரட்டிச்சென்ற வடமாநில வாலிபர் பஸ் மோதி சாவு
சென்னை கீழ்ப்பாக்கம் தாசப்பிரகாஷ் சிக்னல் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் வடமாநில வாலிபர் ஒருவர் வேகமாக ஓடிவந்தார். அவரை விரட்டிவந்த 2 பேர் திடீரென்று அவரை சாலையில் பிடித்து தள்ளினர். அப்போது அந்த வழியாக பிராட்வேயில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த மாநகர பஸ் அந்த வாலிபர் மீது மோதியது.
மோதிய வேகத்தில் அவரை பஸ் சிறிது தூரம் இழுத்துச் சென்றது. இதனால் அவரது முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்த அவரை விரட்டி வந்த வாலிபர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்தவுடன், அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்துவந்து விசாரணை நடத்தினார்கள். பஸ் மோதி இறந்த வடமாநில வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக முதலில் விபத்து சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அந்த வாலிபரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தெரியவில்லை. அவரது சட்டைப்பையில் மத்தியபிரதேசத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரெயில் டிக்கெட் இருந்தது. எனவே அங்கு இருந்து அவர் வேலை தேடி சென்னை வந்தவராக இருக்கலாம் என்று தெரிகிறது. அவரது முகம் சிதைந்துவிட்டதால், அவர் யார் என்று அடையாளம் கண்டுபிடிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.
அந்த வாலிபரை பஸ் முன் தள்ளிவிட்ட சம்பவம் பற்றி முதலில் போலீசாருக்கு தகவல் இல்லை. அக்கம் பக்கத்தினர் இதுபற்றி தெரிவித்த தகவல் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது தான் 2 பேர் விரட்டிவந்து பஸ் முன்பு தள்ளிவிட்டது அவர்களுக்கு தெரியவந்தது.
அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில், அந்த வாலிபரை 2 போதை ஆசாமிகள் விரட்டிவந்து அடித்து உதைத்து, பக்கத்தில் உள்ள சுவரில் தலையை மோதிய காட்சியும் கேமராவில் பதிவாகி உள்ளது. ஆனால் தள்ளிவிட்டது, பஸ் மோதிய காட்சிகள் பதிவாகவில்லை. தள்ளிவிட்ட தகவலை அக்கம் பக்கத்தினர் தெரிவித்ததாக போலீசார் கூறினார்கள்.
இதன் அடிப்படையில் சென்னை எழும்பூர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர். இன்ஸ்பெக்டர் சேட்டு இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். விரட்டிச்சென்ற போதை வாலிபர்கள் இருவரும் எழும்பூர் சந்தோஷ் நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தேவன் (வயது 30), மெக்கானிக் கமல் என்கிற மதுரை முத்து (28) என்பது தெரியவந்தது.
அவர்கள் இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். போதையில் தவறு நடந்துவிட்டதாக அவர்கள் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. வடமாநில வாலிபரிடம் ஹான்ஸ் புகையிலை பொருள் இருக்கிறதா என்று கேட்டதாகவும், அவர் இல்லை என்று சொன்னதால் போதையில் விரட்டிச்சென்று அடிக்கும்போது விபத்து நடந்துவிட்டது என்றும் அவர்கள் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பஸ் டிரைவர் ஈஸ்வரன் என்பவரிடமும் விசாரணை நடக்கிறது.