தமிழகத்தை போன்று உ.பி.யிலும் போராட்டம்; குஜராத் முதல்வருக்கு எதிராக கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டது
குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி பீகார் மாநிலத்தை சேர்ந்தவன் என்று தெரியவந்ததும் பீகார், உத்தரபிரதேச மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து இருமாநிலத்தவர்களும் வெளியேறினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் குஜராத் பா.ஜனதா முதல்வர் விஜய் ரூபானிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸார் கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர். நேற்று அவர் உத்தரபிரதேசம் வந்தபோது கருப்பு கொடிகள் காட்டப்பட்டது. இன்று காலை முதல்வரின் வீடு உள்ள பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர்.
ரூபானி திரும்பிபோ என்ற கோஷம் காங்கிரஸ் கட்சியினரால் எழுப்பப்பட்டுள்ளது, இதனையடுத்து அவர்களை போலீஸ் கைது செய்துள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அன்சு அஸ்வதி பேசுகையில், “குஜராத்தில் வடஇந்தியர்களுக்கு அவர்கள் கொடுத்த வரவேற்பை ரூபானி லக்னோவில் இருக்கும் வரையில் கொடுப்போம். ரூபானி எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் எங்களுடைய போராட்டம் தொடரும்,” என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடந்தது. அப்போது சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது அவருக்கு எதிராக கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டது.