பாகிஸ்தான்: இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீப் கட்சி முன்னேற்றம்
பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தல்களில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் 5 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் வென்றார். இப்படி வெற்றி பெற்றவர்கள் ஒரு தொகுதியை வைத்துக்கொண்டு எஞ்சிய தொகுதிகளில் ராஜினாமா செய்தனர்.
அந்த வகையில் அங்கு மொத்தம் 35 தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. அவற்றில் 11 தொகுதிகள் நாடாளுமன்ற தொகுதிகள் ஆகும். எஞ்சியவை மாகாண சட்டசபை தொகுதிகள் ஆகும். நேற்று வாக்குப்பதிவு முடிவு பெற்றதும் வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது. இதில் 11 நாடாளுமன்ற தொகுதிகளில் 4 இடங்களில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி வென்றுள்ளது. இம்ரான் கான் வென்று இருந்த இரண்டு தொகுதிகளை, அவரது கட்சி இந்த இடைத்தேர்தலில் பறிகொடுத்துள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு 11 தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆளும் பிடிஐ கட்சி, நவாஸ் ஷெரீப் கட்சி தலா 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் முஸ்லீம் லீக் காதி கட்சி இரண்டு இடங்களிலும், முத்தஹிடா மஜ்லிஸ் அமல் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தல் முடிவு, பாகிஸ்தானில் ஆட்சி நடத்தும் கூட்டணி அரசுக்கு எந்த ஒரு பங்கத்தையும் ஏற்படுத்தாது என்ற போதிலும், எதிர்கட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் தேர்தல் முடிவு அமைந்துள்ளது.