பெட்ரோல், டீசல் அளவு குறைவாக விநியோகிக்கும் நிலையங்கள் மீது நடவடிக்கை – தமிழக அரசு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன்காரணமாக நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயமும் உருவாகி இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்ந்து உச்சத்திலேயே செல்கிறது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தநிலையில், பெட்ரோல், டீசல் அளவு குறைவாக விநியோகிக்கும் நிலையங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக தொழிலாளர் துறை சார்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் அளவு குறைவாக விநியோகித்த 127 பெட்ரோல் நிலைய நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* சென்னையில் 34 நிறுவனங்கள், கோவையில் 24 நிறுவனங்கள், திருச்சியில் 30 நிறுவனங்கள், மதுரையில் 39 நிறுவனங்கள் என மொத்தம் 127 பெட்ரோல் நிலையங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* எரிபொருள் நிரப்பும் போது பெட்ரோல், டீசல் பம்புகளில் பூஜ்ஜியத்தில் இருப்பதை நுகர்வோர் உறுதி செய்ய வேண்டும்.
* பெட்ரோல், டீசல் அளவு குறைவாக விநியோகிக்கும் நிலையங்கள் மீதான புகார்களை TN-LMCTS என்ற கைப்பேசி செயலி மூலம் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.