வடமாநில ரெயில் கொள்ளையர்களுக்கு பல்வேறு நகை கொள்ளை வழக்குகளில் தொடர்பு விசாரணையில் திடுக்கிடும் தகவல்
சேலம்-சென்னை ரெயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை அடித்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 கொள்ளையர்களை கைது செய்து சாதனை படைத்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. அம்ரேஷ் பூஜாரி, ஐ.ஜி. ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஸ்வரி, பிரவீண்குமார் அபினப் ஆகியோரது நேரடி மேற்பார்வையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சாஸ்தா, இந்து சேகரன், சாமிக்கண்ணு ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கடுமையான போராட்டம் நடத்தி ரெயில் கொள்ளை வழக்கில் துப்பு துலக்கியுள்ளனர்.
தற்போது இந்த வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தினேஷ் (வயது 38), ரோஹன் பார்த்தி (29) ஆகிய கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரபல கொள்ளைக்காரன் மோஹர்சிங் என்பவர் தலைமையில் தான் இந்த கொள்ளையர்கள் செயல்பட்டுள்ளனர். மோஹர்சிங் உள்பட 5 கொள்ளையர்கள் தற்போது மத்திய பிரதேசத்தில் ஒரு கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் 5 பேரையும் கைது செய்து, சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னைக்கு அழைத்து வர உள்ளனர். இந்த வழக்கில் மேலும் தலைமறைவாக உள்ள 4 கொள்ளையர்களை பிடிக்க வேண்டி இருக்கிறது.
தற்போது கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொள்ளையர்கள் தினேஷ், ரோஹன் பார்த்தி ஆகியோரை சிறையில் வைத்து அடையாள அணிவகுப்பு நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். அதனால் தான் அவர்களுடைய புகைப்படங்களை போலீசார் வெளியிடவில்லை.
இவர்கள் கொள்ளை அடிக்க தமிழகத்துக்கு வந்தபோது, விழுப்புரம், விருத்தாசலம் போன்ற ரெயில் நிலையங்களில் சுற்றி திரிந்துள்ளனர். அப்போது அவர்களை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பார்த்துள்ளனர். ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரை வைத்து புழல் மத்திய சிறையில் அடையாள அணிவகுப்பு நடைபெற இருக்கிறது.
தமிழகத்துக்கு வெளி மாநிலங்களை சேர்ந்த கொள்ளையர்கள் இதுபோல் ஏற்கனவே படையெடுத்து வந்து பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து கெண்டகிருஷ்ணய்யா என்ற கொள்ளையன் தலைமையில் சென்னை உள்பட புறநகர் பகுதிகளில் பெரிய அளவில் முகமூடி கொள்ளையில் ஈடுபட்டனர். ஆனால் தமிழக போலீசார் ஆந்திரா சென்று கெண்டகிருஷணய்யா தலைமையிலான கொள்ளையர்களை கைது செய்து அவர்களின் கொட்டத்தை அடக்கினார்கள்.
இதேபோல ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பவாரியா கொள்ளையர்களும் தமிழகத்துக்கு வந்து ஒரு எம்.எல்.ஏ. உள்பட 26 பேரை கொலை செய்து பல கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர். அந்த கொள்ளையர்களையும் தமிழக போலீசார் கூண்டோடு கைது செய்து அவர்களில் 2 கொள்ளையர்களை என்கவுண்ட்டர் மூலம் சுட்டு வீழ்த்தினார்கள். இதுபோல சென்னையில் பல்வேறு வங்கிகளில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்த 5 வடமாநில கொள்ளையர்கள் போலீசாரால் சென்னை வேளச்சேரியில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டார்கள்.
இதுபோல் தமிழக போலீசாரின் அதிரடி நடவடிக்கை காரணமாக வெளிமாநில கொள்ளையர்கள் ஓரளவு அடங்கிப்போனார்கள். தற்போது மத்திய பிரதேசத்தை சேர்ந்த பார்த்தி கொள்ளையர்கள் தமிழகத்தில் தற்போது வாலாட்டி இருக்கிறார்கள். இவர்களையும் போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.
பார்த்தி கொள்ளையர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி இருக்கிறார்கள். திருவள்ளூரில் ஒரு ஆடிட்டர் வீட்டில் 200 பவுன் நகைகளையும், திண்டிவனத்தில் ஒரு டாக்டர் வீட்டில் 200 பவுன் நகைகளையும், விழுப்புரத்தில் 2 வீடுகளில் 100 பவுன் நகைகளையும் மொத்தம் 500 பவுன் நகைகளை இந்த பார்த்தி கொள்ளையர்கள் தமிழகத்தில் இருந்து கொள்ளை அடித்து மூட்டைக்கட்டி அள்ளி சென்று இருக்கின்றனர்.
போலீஸ் விசாரணையில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் தமிழகத்தில் என்னென்ன கொள்ளை சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டனர் என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ரெயிலில் கொள்ளை அடித்து சென்ற ரூ.5.78 கோடி பணத்தையும் கொள்ளையர்கள் பங்கு போட்டு செலவழித்து விட்டதாக தெரிகிறது. அந்த பணத்தில் அவர்கள் சொத்துகளை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. கோர்ட்டு மூலம் கொள்ளையர்களின் சொத்துகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.