வெஸ்ட் இண்டீஸ் அணியை 3–வது நாளிலேயே சுருட்டி 2–வது டெஸ்டிலும் இந்தியா அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது
ஐதராபாத்தில் நடந்த 2–வது டெஸ்டிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை 3–வது நாளிலேயே சுருட்டிய இந்திய அணி தொடரை 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ரிஷாப் பான்ட் 92 ரன்
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் கடந்த 12–ந்தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 311 ரன்கள் எடுத்ததை தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2–வது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் 85 ரன்களுடனும், துணை கேப்டன் ரஹானே 75 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
இந்த நிலையில் 3–வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷாப் பான்ட், ரஹானே இருவரும் ஏமாற்றம் அளித்தனர். ஆட்டம் தொடங்கிய 3–வது ஓவரிலேயே ரஹானே (80 ரன்), ஹோல்டரின் பந்து வீச்சில் ‘கல்லி’ திசையில் நின்ற ஷாய் ஹோப்பிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா (0) அதே ஓவரில் எல்.பி.டபிள்யூ. ஆனார். ரிஷாப் பான்ட் (92 ரன், 134 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) கேப்ரியல் வீசிய ‘ஷாட்பிட்ச்’ பந்தில் விக்கெட்டை தாரைவார்த்தார். அதாவது பீல்டருக்கு இடையே பந்தை அடிக்க முற்பட்ட போது, அது நேராக ‘கவர்பாயிண்ட்’ திசையில் நின்ற ஹெடிம்யேரிடம் கேட்ச்சாக போய் விழுந்தது. ரிஷாப் பான்ட் முதலாவது டெஸ்டிலும் 92 ரன்களில் ஆட்டம் இழந்தது நினைவிருக்கலாம். இறுதி கட்டத்தில் அஸ்வின் (35 ரன், 83 பந்து, 4 பவுண்டரி) மட்டும் குறிப்பிடத்தக்க வகையில் ஆடினார். முடிவில் இந்திய அணி 2–வது இன்னிங்சில் 367 ரன்கள் குவித்து ஆல்–அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜாசன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் சுருண்டது
அடுத்து 56 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திண்டாடியது. வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவின் துல்லியமான தாக்குதல் ஒரு பக்கம் என்றால், மறுமுனையில் சுழற்பந்து வீச்சாளர்கள் இடைவிடாது குடைச்சல் கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் கிரேக் பிராத்வெய்ட், கீரன் பவெல் இருவரும் ரன் கணக்கை தொடங்கும் முன்பே நடையை கட்டினர்.
‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்பது போல் வெஸ்ட் இண்டீசின் போக்கு அமைந்தது. தொடர்ந்து, விக்கெட்டுகளை வேகமாக இழந்து தள்ளாடியது. முதலாவது இன்னிங்சில் சதம் அடித்த ரோஸ்டன் சேஸ் (6 ரன்) உமேஷ் யாதவின் ‘இன்ஸ்விங்’ பந்தில் போல்டு ஆனார். சுனில் அம்ப்ரிஸ் (38 ரன், 95 பந்து) தவிர மற்ற யாரும் அதிக நேரம் நிலைக்கவில்லை. முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 46.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கு முடங்கியது. இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.
இந்தியா வெற்றி
இதன் மூலம் இந்திய அணிக்கு 72 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுலும், பிரித்வி ஷாவும் அணியை சிரமமின்றி வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். பிரித்வி ஷா பந்தை பவுண்டரிக்கு விரட்டி இலக்கை எட்ட வைத்தார். இந்திய அணி 16.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது. ராகுல், பிரித்வி ஷா தலா 33 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இரண்டு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 10 விக்கெட்டுகள் கைப்பற்றி தனது சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த உமேஷ் யாதவ் ஆட்டநாயகனாகவும், இளம் வீரர் பிரித்வி ஷா தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2–0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த தொடரில் முழுமையாக கோலோச்சிய இந்திய அணி இரண்டு டெஸ்டையும் மூன்று நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டு வந்திருப்பது கவனிக்கத்தக்கது.
ஒரு நாள் போட்டி
அடுத்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 21–ந்தேதி கவுகாத்தியில் நடக்கிறது.
உள்நாட்டில் தொடர்ந்து 10–வது தொடரை வென்று இந்தியா சாதனை
உள்நாட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக ருசித்த 10–வது டெஸ்ட் தொடர் இதுவாகும். இதற்கு முன்பு உள்ளூரில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா இரண்டு முறை (1994 முதல் 2000–ம் ஆண்டு வரை மற்றும் 2004–2008) தொடர்ந்து 10 தொடர்களை கைப்பற்றியதே சாதனையாக இருக்கிறது. அச்சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. இந்திய அணி சொந்த மண்ணில் கடைசியாக 2012–ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தொடரை 1–2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அதன் பிறகு உள்ளூரில் அசைக்க முடியாத அணியாக இந்தியாவின் பயணம் கம்பீரமாக தொடருகிறது. இந்தியா தொடர்ந்து வென்ற 10 டெஸ்ட் தொடர்களின் முடிவு வருமாறு:–
ஆண்டு எதிரணி முடிவு
2013 ஆஸ்திரேலியா 4–0
2013 வெஸ்ட் இண்டீஸ் 2–0
2015 தென்ஆப்பிரிக்கா 3–0
2016 நியூசிலாந்து 3–0
2016 இங்கிலாந்து 4–0
2017 வங்காளதேசம் 1–0
2017 ஆஸ்திரேலியா 2–1
2017 இலங்கை 1–0
2018 ஆப்கானிஸ்தான் 1–0
2018 வெஸ்ட் இண்டீஸ் 2–0
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியாவின் ஆதிக்கம்
*டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். மொத்தத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி காண்பது இது 8–வது நிகழ்வாகும்.
*இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2002–ம் ஆண்டில் இருந்து விளையாடிய 21 டெஸ்டுகளில் (12 வெற்றி, 9 டிரா) தோல்வியே சந்தித்ததில்லை. வேறு எந்த அணிக்கு எதிராகவும் இந்திய அணி இப்படியொரு ஆதிக்கம் செலுத்தியது கிடையாது.
*இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த பிரித்வி ஷாவுக்கு (2 டெஸ்டில் 237 ரன்) தொடர்நாயகன் விருதுடன், ரூ.2½ லட்சம் பரிசும் வழங்கப்பட்டது. இதன் மூலம் அறிமுக தொடரிலேயே தொடர்நாயகன் விருது பெற்ற 10–வது வீரர் என்ற பெருமையை 18 வயதான பிரித்வி ஷா பெற்றார்.
*முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஜாசன் ஹோல்டர் 56 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய மண்ணில் 1994–ம் ஆண்டுக்கு பிறகு ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் இவர் தான்.
*வேகப்பந்து வீச்சாளரான மராட்டியத்தை சேர்ந்த உமேஷ் யாதவ் இரண்டு இன்னிங்சையும் சேர்த்து 133 ரன்கள் விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளை அறுவடை செய்து அசத்தினார். இந்திய மண்ணில் ஒரு டெஸ்டில் 10 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகளை கைப்பற்றிய 3–வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஆவார். இதற்கு முன்பு கபில்தேவ் (2 முறை), ஜவஹல் ஸ்ரீநாத் ஆகியோர் இச்சாதனையை செய்துள்ளனர்.