ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச் ‘சாம்பியன்’
ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வந்தது. நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), குரோஷியாவின் போர்னா கோரிச்சுடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் கோரிச்சை தோற்கடித்து இந்த பட்டத்தை 4–வது முறையாக கைப்பற்றினார். ஜோகோவிச் தொடர்ச்சியாக பெற்ற 18–வது வெற்றி இதுவாகும். அவருக்கு ரூ.10 கோடி பரிசுத்தொகையுடன் ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது. 2–வது இடத்தை பிடித்த போர்னா கோரிச் சுமார் ரூ.5 கோடியை பரிசாக பெற்றார். ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய மாஸ்டர்ஸ் போட்டியில் ஜோகோவிச் மகுடம் சூடுவது இது 32–வது முறையாகும். ஒட்டுமொத்தத்தில் அவரது 72–வது பட்டம் இதுவாகும். தரவரிசையில் 3–வது இடத்தில் இருந்து 2–வது இடத்துக்கு முன்னேறியுள்ள ஜோகோவிச், ஆண்டின் இறுதியில் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிப்பதற்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. முதலிடத்தில் உள்ள ஸ்பெயினின் ரபெல் நடாலை விட அவர் 35 புள்ளி மட்டுமே பின்தங்கியுள்ளார்.