நான் பிரசாரத்தில் ஈடுபட்டால் காங்கிரஸ் தோற்கும் -மூத்த தலைவர் திக்விஜய் சிங்
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட5 மாநிலங்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் தரப்பில் இருந்து யாரை வேட்பாளராக நிறுத்துவது, யாருடன் கூட்டணி அமைப்பது என்பது போன்ற பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் முக்கிய தலைவருமான திக்விஜய் சிங் அளித்துள்ள பேட்டி, காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
திக்விஜய் சிங் கூறியதாவது;-
நான் ஓட்டுக் கேட்டு வந்தாலோ, பரப்புரை கூட்டங்களில் பங்கேற்று பேசினாலோ காங்கிரஸ் கட்சி தோற்கும் நிலைக்கு செல்லும், ஓட்டுகள் குறைந்து விடும் வாய்ப்பு இருக்கிறது. அதிக அளவில் அனைவரும் சேர்ந்து உழைத்தால் மட்டுமே மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெல்லும், நண்பனா, எதிரியா என பார்க்காமல் அனைத்து தொண்டர்களும் வேலை செய்ய வேண்டும்.
திக்விஜய் சிங்கின் கருத்து குறித்து பதிலளித்த மத்திய முன்னாள் அமைச்சர் கமல்நாத், எந்த அடிப்படையில் திக் விஜய் சிங் இது போன்று கருத்து தெரிவித்தார் என தெரியவில்லை, ஆனால் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் கட்சியின் வெற்றிக்காக தொடர்ந்து உழைத்து வருகிறார்கள், தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம என தெரிவித்தார்.
திக்விஜய் சிங்கின் இந்த திடீர் கருத்தால் காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது கூட்டணியை உடைக்க திக்விஜய் சிங்தான் காரணம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.