பெண்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சன்னிதானம் பகுதியில் அய்யப்ப பக்தர்கள் போராட்டம், பதற்றம் அதிகரிப்பு
சபரிமலைக்கு பெண்கள் வர எதிர்ப்பு தெரிவித்து சன்னிதானம் முன்பு அய்யப்ப பக்தர்கள் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் ஆந்திர பெண் செய்தி வாசிப்பாளர் கவிதா மற்றும் மற்றொரு பெண்ணும் சபரிமலைக்கு சென்றுள்ளனர். கவிதாவுடன் செல்வது பெண்ணியவாதி ரஹானா பாத்திமா என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானத்தின் கீழ்ப்பகுதியான நடைப்பந்தலை சென்றடைந்தனர்.
இருவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் அணிவிக்கப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இருவரும் சன்னிதானத்திற்கு வருவதை எதிர்த்து அய்யப்ப பக்தர்கள் அங்கு போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகிறார்கள்.
இருப்பினும் அய்யப்ப பக்தர்கள் பெண்களை பிரவேசிக்க அனுமதிக்க மாட்டோம் என ஸ்திரமாக கூறி போராட்டம் மேற்கொண்டு உள்ளனர். அவர்கள் அய்யப்ப கோஷம் எழுப்பி போராட்டம் மேற்கொள்கிறார்கள். போலீஸ் பேச்சுவார்த்தையை மேற்கொள்கிறது. போராட்டம் காரணமாக அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. சன்னிதானத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் பெண்கள் இருவரும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.