இன்று தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஆப்கானிஸ்தானில் போலீஸ் துறை தலைவர் சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தானில் இன்று (சனிக்கிழமை) நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், காந்தஹார் மாகாண போலீஸ் துறை தலைவர், பாதுகாவலர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட பாதுகாவலரும், பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டார்.
ஆப்கானிஸ்தானில் இரு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று (சனிக்கிழமை) நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அங்கு தலீபான்கள் வீழ்த்தப்பட்ட பின்னர் நடக்கிற 3-வது நாடாளுமன்ற தேர்தல் இது ஆகும்.
இந்த நிலையில், காந்தஹார் நகரில், கவர்னர் மாளிகை வளாகத்தில் உயர்மட்ட கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காந்தஹார் மாகாண கவர்னர் ஜல்மாய் வெசா, போலீஸ் துறை தலைவர் ஜெனரல் அப்துல் ராசிக், அமெரிக்க படைத்தளபதி ஜெனரல் ஸ்காட் மில்லர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஜெனரல் அப்துல் ராசிக், பாதுகாவலர் ஒருவராலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். அவருக்கு வயது 40.
இந்த தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர். இது தொடர்பாக அவர்கள் குறிப்பிடுகையில், “ மிருகத்தனமான காந்தஹார் போலீஸ் துறை தலைவர், ஜெனரல் அப்துல் ராசிக்கும், அமெரிக்க படைத்தளபதி ஜெனரல் ஸ்காட் மில்லரும் குறிவைக்கப்பட்டனர். ஆனால் மில்லர் ஸ்காட் தப்பித்து விட்டார்” என கூறினர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது, உள்ளூர் உளவுப்பிரிவு உயர் அதிகாரி ஒருவரும் பலியானார் என தகவல்கள் கூறுகின்றன.
கவர்னர் ஜல்மாய் வெசா மற்றும் அமெரிக்கர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம், தலீபான் பயங்கரவாதிகளுக்கு மிகப்பெரிய வெற்றி என்றும், ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு பலத்த அடி என்றும் கருதப் படுகிறது.
சம்பவம் தொடர்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் சர்வதேச பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறும்போது, “ உயர் மட்டக்குழு கூட்டம் முடிந்து, ஜெனரல் அப்துல் ராசிக் புறப்பட்டார். அமெரிக்க படையினரை காபூல் நகருக்கு ஏற்றிச்செல்வதற்காக தயார் நிலையில் ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு அவர் சென்றபோதுதான் பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்” என்றனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது அமெரிக்க படைத்தளபதி ஸ்காட் மில்லர், கவச உடை அணிந்திருந்ததால்தான் தப்பினார் என தகவல்கள் கூறுகின்றன.
ஜெனரல் அப்துல் ராசிக் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதற்கு ஸ்காட் மில்லர் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ நான் என் மிகப்பெரிய நண்பரை இழந்து விட்டேன்” என கூறினார்.
துப்பாக்கிச்சூடு நடத்திய பாதுகாவலர், பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார் என தகவல்கள் கூறுகின்றன.
கடந்த 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடந்து வருகிற உள்நாட்டுப்போரில், பாதுகாப்பு படையினரை குறி வைத்து நடந்துள்ள இந்த தாக்குதல் மிகப்பெரிய தாக்குதல் என கூறப்படுகிறது.
சுட்டுக்கொல்லப்பட்ட ஜெனரல் அப்துல் ராசிக், காந்தஹார் மாகாணத்தைத் தாண்டி செல்வாக்கு பெற்றிருந்தவர். கடந்த சில வருடங்களாக அவர் ஆப்கானிஸ்தானின் வலிமை வாய்ந்த பாதுகாப்பு படை மற்றும் அரசியல் பிரபலமாக உருவாகி வலம் வந்தார்.
தலீபான் பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தானுக்கும் அவர் சிம்ம சொப்பனமாகவும் விளங்கி வந்தார். குறிப்பாக ஆப்கானிஸ்தானில் தலீபான் எதிர்ப்பு போரின் அடையாளச்சின்னமாக குறிப்பிடப்பட்டு வந்தார். இதற்கு முன்னர் ஏறத்தாழ 20 முறை அவரை கொல்ல முயற்சி நடந்தது. அவற்றில் எல்லாம் அவர் தப்பித்து விட்டார்.
இப்போது அவர் கொல்லப்பட்டு விட்டதால் காந்தஹாரில் தலீபான்களின் ஆதிக்கம் மேலும் பெருகும் என அஞ்சப்படுகிறது.
இன்று (சனிக்கிழமை) நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படக்கூடும் என பீதி எழுந்துள்ளது. ஜெனரல் அப்துல் ராசிக் கொல்லப்பட்டு விட்டதால், வாக்குச்சாவடிகளுக்கு மக்கள் வருவார்களா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ ஜெனரல் ராசிக்கின் மரணம், பாதுகாப்பு துறையிலும், ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதி தேர்தலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஓட்டு போடச்செல்வது பாதுகாப்பாக இருக்காது என்று வாக்காளர்கள் கருதக்கூடும்” என குறிப்பிட்டார்.