சென்னையில் கோவில்கள், பள்ளிகளில் விஜயதசமி விழா கொண்டாட்டம் குழந்தைகளுக்கு எழுத கற்றுக்கொடுத்த பெற்றோர்
சென்னையில், கோவில்கள் மற்றும் பள்ளிகளில் விஜயதசமி விழா நேற்று கொண்டாடப்பட்டது. பெற்றோர்கள் தங்களது குழந்தைக்கு படிக்க, எழுத கற்றுக்கொடுத்தனர்.
நவம் என்பது 9 ஆகும். அகில உலகத்தை ஆளும் ஆதிபராசக்தியானவள், 9 நாட்கள் போரிட்டு 10-வது நாளில் மகிஷாசுரனை வெற்றி பெறுவாள். வெற்றியை குறிக்கும் விஜயம் என்ற வார்த்தையும், 10-வது நாளை குறிக்கும் தசம் என்ற வார்த்தையும் இணைந்து விஜயதசமி என்று பெயர் பெற்றது.
இந்த நவராத்திரி விழாவானது ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை வளர்பிறை திதியில் தொடங்கி பத்தாவது நாளான தசமி திதி அன்று நடைபெறுகிறது. இதில் முதல் 9 நாட்களில் ஆதிபராசக்தியை வீரத்தை வேண்டி துர்கையாகவும், செல்வத்தை வேண்டி லட்சுமியாகவும், அறிவை வேண்டி சரஸ்வதியாகவும் மக்கள் நவராத்திரி விரதம் இருந்து வழிபடுவர்.
10-வது நாளான விஜயதசமி அன்று ஆதிபராசக்தியானவள் மகிஷாசுரமர்த்தினி அவதாரத்தில் அரக்கன் மகிஷாசுரனை சம்காரம் செய்வாள். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு விரதம் இருக்கும் மக்கள் தங்கள் விரதத்தை முடித்துக் கொள்வர். அன்னை ஆதிபராசக்தியின் வெற்றி தினமான இந்த விஜயதசமி அன்று தொடங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்பது ஐதீகம்.
அதனால், பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கோவில்கள் அல்லது வீடுகளில் வைத்து முதல் முறையாக நெல் அல்லது அரிசியால் ஆனா அட்சதை தட்டுகளில் ‘அ’கரம் முதலான எழுத்துகளை எழுத படிக்க கற்றுக்கொடுக்கின்றனர்.
அண்மை காலங்களில் இது மேலும் விரிவடைந்து, பெரும்பாலான பள்ளிகளில் விஜயதசமி அன்று சிறப்பு சேர்க்கைகள் நடத்தப்பட்டு, பள்ளிகளிலும் இதே போன்று அட்சதை தட்டுகளில் சிறுவர்-சிறுமிகளுக்கு ‘அ’கரம் எழுத படிக்க சொல்லிக்கொடுக்கின்றனர்.
அதன்படி, சென்னையில் உள்ள மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவில் உள்பட பெரும்பாலான கோவில்கள் மற்றும் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் விஜயதசமியான நேற்று ‘அட்சர அப்யாசம்’ கற்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதே போன்று, விஜயதசமி அன்று தொடங்கும் காரியங்கள் வெற்றி பெறுவதால், ஏராளமானோர் அன்றைய தினம் புதிய தொழில்களையும் தொடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், விஜயதசமிக்கு முந்தை நாளான ஆயுதபூஜை தினத்தன்று சிறு வணிகர்கள் முதல் பெரும் தொழில் நடத்துபவர்கள் கூட தங்கள் நிறுவனங்களில் உள்ள தொழில் கருவிகளுக்கு பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.
அதே போன்று ஆட்டோ மற்றும் கார் ஓட்டுனர்களும், சொந்தமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வைத்து இருப்பவர்களும் தங்கள் வாகனங்களுக்கு அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.