சபரிமலை கோவில் நடை இன்று சாத்தப்படுகிறது, ஊடகங்கள் வெளியேற போலீஸ் உத்தரவு
எல்லா வயது பெண்களையும் சபரிமலை கோவிலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய பின்னர் ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இருப்பினும் பக்தர்கள் போராட்டம் காரணமாக 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் கோவிலுக்கு செல்லவில்லை. செல்ல முயற்சித்த 9 பெண்களும் போராட்டம் காரணமாக திரும்பினர். இதற்கிடையே கோவிலின் ஐதீகத்திற்கு எதிராக பெண்கள் அனுமதிக்கப்பட்டால் கோவிலை மூடிவிடுவோம் என அரசுக்கு கோவில் நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது.
கோவிலுக்கு செல்ல பெண்கள் அனுமதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் குறித்து நாளை சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்கிறது. 17-ம் தேதி திறக்கப்பட்ட கோவில் நடை இன்று சாத்தப்படுகிறது. இந்நிலையில் ஊடகங்கள் வெளியேற போலீஸ் உத்தரவிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. பம்பை மற்றும் நிலக்கல் பகுதியில் உள்ள ஊடகவியலாளர்கள் மீது கடைசி நாளில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு கருதி அவர்கள் அங்கிருந்து செல்லுமாறு போலீஸ் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே சபரிமலையில் போராட்டம் நடத்துபவர்கள் பா.ஜனதாவினர் என்ற கூற்றை அக்கட்சி மறுத்துள்ளது.