எவ்வளவு நாட்கள் முதல் அமைச்சர் பதவியில் நீடிப்பேன் என்பதை பற்றி நான் கவலைப்படவில்லை: குமாராசாமி
முதல் மந்திரி பொறுப்பில் இருக்கும் வாய்ப்பானது கடவுளால் தரப்பட்டது எனவும், எவ்வளவு நாட்கள் இப்பொறுப்பில் இருக்கப்போகிறேன் என்பதை பற்றி நான் கவலைப்படவில்லை என்று கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில், கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போதிலும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக பின்வாங்கியது.
இதையடுத்து, காங்கிரஸுடன் இணைந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைத்தது. முதல் மந்திரியாக குமாரசாமி உள்ளார். கூட்டணி ஆட்சி நடைபெற்றுவரும் கர்நாடகாவில் அவ்வப்போது, ஆட்சிக்கு எதிராக ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களே போர்க்கொடி தூக்குவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி பின் அடங்குகின்றன. இதனால், கர்நாடக அரசியல் எப்போதும் பரபரப்பாக உள்ளது.
இந்த நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கர்நாடக முதல் மந்திரி எச்.டி குமாரசாமி, “ முதல் அமைச்சர் பதவியில் எவ்வளவு நாட்கள் இருப்பேன் என்பதை பற்றி தான் ஒரு போதும் கவலைப்படுவதில்லை” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- “ 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் புதிய தளத்தை கர்நாடகா வழங்கும். புதிய அரசியல் மாற்றம் இங்கிருந்துதான் ஏற்படும். நான் முதல் அமைச்சராக இருப்பது கடவுள் எனக்கு கொடுத்த பாக்கியம். இந்த பொறுப்பை மக்கள் நலனுக்காக நான் பயன்படுத்துவேன்”என்றார்.