பணியிடங்களில் பாலியல் தொல்லைகள் பற்றி விசாரிக்க ராஜ்நாத் சிங் தலைமையில் மந்திரிகள் குழு அமைப்பு
இந்தியாவில் திரைப்பட துறையில் மீடூ விவகாரம் பிரபலம் அடைந்த நிலையில், பணியிடங்களில் தங்களை பாலியல் தொல்லை செய்த நபர்களின் பெயர்களை பல்வேறு பெண்கள் வெளியிட தொடங்கினர்.
மத்திய இணை மந்திரியாக இருந்த எம்.ஜே. அக்பர் மீது 10 பெண் பத்திரிகையாளர்கள் உள்பட 16க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர் பதவி விலகினார்.
இந்த நிலையில் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை பற்றி விசாரிக்க குழு ஒன்றை அமைக்க அரசு முடிவு செய்தது.
அதன்படி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான மந்திரிகள் குழுவை அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை மந்திரி மேனகா காந்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கின்றது.
இந்த குழுவானது பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் விவகாரங்களை பற்றி விசாரிக்க, நடைமுறையிலுள்ள சட்டப்பூர்வ மற்றும் அமைப்பு சார்ந்த விதிகளை ஆய்வு மேற்கொள்ளும். அதன்பின் இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான மற்றும் வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கும்.