மீண்டும் புதிய படத்தில் ரஜினிகாந்த்?
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததும் உடனே கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதே எங்கள் இலக்கு என்று கூறி ரஜினி மக்கள் மன்றத்தை உருவாக்கி அதற்கு உறுப்பினர் சேர்ப்பதிலும் நிர்வாகிகளை நியமிப்பதிலும் தீவிரம் காட்டினார்.
கபாலியை முடித்து விட்டு தொடர்ந்து காலா படத்தில் நடிக்கவும் தொடங்கினார். காலா படம் வெளியானதும் கட்சியை அறிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் பேட்ட படத்தில் நடிக்க போய்விட்டார். இந்த படத்தை முடித்து விட்டு அடுத்த மாதம் டிசம்பர் 12–ந்தேதி தனது பிறந்த நாளில் கட்சி பெயரை அறிவித்து விடுவார் என்று பேசப்பட்ட நிலையில் அப்போது இல்லை என்று மறுத்து விட்டார்.
எனவே ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது தள்ளிப்போகிறது. அதற்கு முன்பாக இன்னொரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் கூறுகின்றனர். ஏற்கனவே நடித்த கபாலி, காலா படங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் கதையம்சத்தில் இருந்தன. நவம்பர் மாதம் திரைக்கு வர இருக்கும் 2.0 படம் எந்திர மனிதன் பற்றிய அறிவியல் கதை.
எனவே இவை மாதிரியாக இல்லாமல் அனைத்து மக்களுக்கும் பிடிக்கும் வகையில் எம்.ஜி.ஆர் பாணியிலான ஒரு படத்தில் தேர்தலுக்கு முன்பு நடித்து விட ரஜினிகாந்த் ஆசைப்படுவதாகவும் இதற்காக அருணாசலம் படம் மாதிரி கதையொன்றை அவர் எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏ.ஆர்.முருகதாசிடம் கதை கேட்டு இருக்கிறார். அவரும் ரஜினி எதிர்பார்ப்பது மாதிரியான கதையை தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.