உலகின் மிக நீண்ட கடல் பாலம் திறப்பு
அண்டை நாடான, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள, மக்காவு மற்றும் தன்னாட்சி பிரதேசமான, ஹாங்காங் பகுதிகளை, சீனாவின், சூஹாய் நகரில் இணைக்கும் வகையில், உலகின் மிக நீண்ட கடல் பாலம் கட்டும் பணி, ஒன்பது ஆண்டுகளாக நடந்தது. இந்த பாலத்தை, 2016ல், திறக்க திட்டமிடப்பட்டது. ஒருசில காரணங்களால், பாலம் திறப்பது ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று, சீனாவின், சூஹாய் நகரத்தில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியில், உலகின் மிக நீண்ட கடல் பாலத்தை, சீன அதிபர் ஜி ஜின்பிங் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஹாங்காங்கைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்த பாலத்தின் மூலம், சீனா — ஹாங்காங் இடையேயான பயண நேரம், மூன்று மணி நேரத்திலிருந்து, 30 நிமிடங்களாக குறையும்.
இந்த பாலத்தை கட்ட, 1.48 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளது. 6.8 கோடி மக்களுக்கு பயன்படும் இந்த பாலம், சுற்றுலாப் பயணியர் எளிதாக கடந்துச் செல்ல வழிவகுக்கும். ‘இந்த பாலத்தில் பயணம் செய்ய, சிறப்பு வாடகை கார்களை பயன்படுத்த வேண்டும் அல்லது விரைவு பேருந்தை பயன்படுத்த வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.