அமலாக்கத்துறை இயக்குனராக சஞ்சய் குமார் மிஸ்ரா நியமனம் – மத்திய அரசு அறிவிப்பு
விசாரணை அமைப்புகளில் ஒன்றான அமலாக்கத்துறையின் இயக்குனராக இருப்பவர் கர்னால் சிங். இவரது பதவிக்காலம் இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது. எனவே அமலாக்கத்துறையின் புதிய இயக்குனராக சஞ்சய் குமார் மிஸ்ராவை மத்திய அரசு நியமித்து உள்ளது. அவர் இன்று பொறுப்புகளை ஏற்பார்.
டெல்லி வருமான வரித்துறை தலைமை கமிஷனராக பணியாற்றி வந்த சஞ்சய் குமார் மிஸ்ரா, 1984-ம் ஆண்டு பிரிவு இந்திய வருவாய் பணிகள் (ஐ.ஆர்.எஸ்.) அதிகாரி ஆவார். தற்போது அமலாக்கத்துறை நிறுவனத்தின் முதன்மை சிறப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ள இவர், 3 மாதங்களுக்கு அமலாக்கத்துறை இயக்குனர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.
அமலாக்கத்துறை இயக்குனர் பதவி என்பது மத்திய அரசின் கூடுதல் செயலாளர் பதவியாகும். ஆனால் சஞ்சய் குமார் மிஸ்ரா, இதுவரை மத்திய அரசின் கூடுதல் செயலாளராக அங்கீகரிக்கப்படவில்லை. எனவே அமலாக்கத்துறை இயக்குனர் பொறுப்பை அவர் கூடுதலாகவே கவனிப்பார்.
எனினும் அவர் விரைவில் கூடுதல் செயலாளராக அங்கீகாரம் பெறுவார் என தெரிகிறது. அதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் இயக்குனர் பொறுப்பை நிரந்தரமாக அவர் வகிப்பார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.