இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி; 43 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. கவுகாத்தியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது ஆட்டம் சமனில் (டை) முடிந்தது.
இந்த நிலையில் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 283 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு 284 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனை அடுத்து விளையாடிய இந்திய அணியில் ரோகித் (8), தவான் (35), ராயுடு (22), பன்ட் (24), தோனி (7) ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் கேப்டன் கோலி (107) 37.1வது ஓவரில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் சதம் அடித்து ஆட்டமிழந்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 3 முறை சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
புவனேஷ்குமார் (10), சஹால் (3), அகமது (3), பும்ரா (0) ரன்களில் ஆட்டமிழந்தனர். குல்தீப் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்திய அணி 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்துள்ளது.
இதனால் இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.