இந்திய, ஜப்பான் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் சென்றார் – டோக்கியோவில் உற்சாக வரவேற்பு
இந்திய, ஜப்பான் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் சென்றார். டோக்கியோ சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டோக்கியோ சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா, ஜப்பான் இடையேயான வருடாந்திர மாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. 2 நாள் நடைபெறுகிற இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
இதற்காக அவர் டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டோக்கியோ புறப்பட்டு சென்றார். இந்த மாநட்டின்போது இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் அம்சங்கள் குறித்தும் பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயும் கலந்து பேசுவார்கள்.
டோக்கியோ புறப்படுவதற்கு முன்பாக பிரதமர் மோடி, அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
இந்தியாவும், ஜப்பானும் வெற்றிக்கூட்டணி ஆகும். பொருளாதாரம் மற்றும் தொழில் நுட்ப நவீன மயத்தில் ஜப்பான், இந்தியாவின் நம்பத்தகுந்த கூட்டாளி ஆகும்.
இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்கிற நாடாக ஜப்பான் திகழ்கிறது.
ஜப்பானுடனான நமது உறவு, பொருளாதார ரீதியிலும், கொள்கை ரீதியிலும் சமீப காலத்தில் முற்றிலும் மாற்றம் கண்டுள்ளது. இன்றைய தினம் இது மிகப்பெரிய பொருள் மற்றும் நோக்கத்துக்கான கூட்டாளித்துவம் ஆகும்.
நான் பிரதமரான பிறகு முதன் முதலாக 2014-ம் ஆண்டு செப்டம்பரில் ஜப்பான் சென்றேன். அதைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயுடன் நடத்தப்போகிற இந்த சந்திப்பு, 12-வது சந்திப்பு ஆகும்.
இரு நாடுகளும் ஜனநாயக நாடுகள். அனைவருக்கும் சமாதானத்தையும், வளத்தையும் நாடுகிறோம்.
மும்பை- ஆமதாபாத் அதிவேக ரெயில் திட்டம், அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு சாலை திட்டம், நமது பொருளாதார செயல்பாடுகளின் உச்சகட்ட அளவையும், வலுவையும் பிரதிபலிக்கின்றன.
நமது டிஜிட்டல் இந்தியா, இந்தியாவில் தொடங்குவோம், எழுந்து நில் இந்தியா திட்டங்களின் முயற்சிகளில் ஜப்பான் முன்னணியில் உள்ளது.
இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் மீது ஜப்பானிய முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
இந்தப் பயணத்தின்போது ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துவேன்.
இரு நாட்டு தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடுவேன். அங்குள்ள இந்திய சமூகத்தினர் மத்தியில் பேசுவேன். இது நமது வர்த்தகம், முதலீடு உறவுகளை வலுப் படுத்த உதவும் என்று அவர் கூறினார்.
பிரதமர் மோடிக்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ யமனாஷி மாகாணத்தில் உள்ள தனது விடுமுறை கால ஓய்வு இல்லத்தில் சிறப்பு விருந்து வழங்கி கவுரவிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, மனைவியுடன் இந்தியா வந்தபோது குஜராத்தில் பிரதமர் மோடி விருந்து அளித்து சிறப்பித்தது நினைவு கூரத்தக்கது.
பிரதமர் மோடி, நேற்று மாலை டோக்கியோ போய்ச்சேர்ந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.