ஐக்கிய அரபு நாட்டில் இம்ரான்கான் தங்கைக்கு பினாமி சொத்துக்கள் – சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல்
பாகிஸ்தானில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்தவர்கள் குறித்து விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதுகுறித்து பெடரல் புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. அதன் அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஷாகிப் நிசார் தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் தங்கை அலீமாகான் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவர் ஐக்கிய அரபு நாட்டில் பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார்.
அதைதொடர்ந்து அவருக்கு நோட்டீசு வழங்கப்பட்டது. அப்போது வீட்டில் அலீமாகான் இல்லை. அவர் வெளிநாடு சென்று விட்டதாக வேலைக்கார பெண் தெரிவித்தார்.
இவர் தவிர பாகிஸ்தானை சேர்ந்த மேலும் 44 அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் ஐக்கிய அரபு நாடுகளில் பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.