பன்றிக்காய்ச்சலால் தமிழகத்தில் 15 பேர் பலி: சுகாதாரத்துறை செயலர் தகவல்
பன்றிக்காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை சைதாப்பேட்டை தாண்டர் நகரில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்புகளில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், காய்ச்சல் ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஜனவரி முதல் பன்றிக்காய்ச்சலால் இந்தியா முழுவதும் 8,025 பேர் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 625 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார். இருப்பினும், காய்ச்சல் ஏற்பட்டதும் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டால் டெங்கு, பன்றிக்காய்ச்சலை முற்றிலும் தவிர்க்கலாம் எனவும், இதுகுறித்து அச்சமடைய வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.