மேல்முறையீடு செய்வது குறித்து மக்களை சந்தித்தபின் முடிவு டி.டி.வி.தினகரன் அறிவிப்பு
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதிநீக்கம் செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மதுரையில் நேற்று முன்தினம் டி.டி.வி.தினகரன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
அந்த கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றும், தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் சிலருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில் நேற்று மதுரையில் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதிநீக்கம் தொடர்பான ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த முடிவில் 18 பேரும் ஒற்றுமையான கருத்துகளை தெரிவித்தனர். அவர்களிடம் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
ஆலோசனை கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படும் தகவல் உண்மை இல்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். சலசலப்பு ஏற்படும் என்று எதிர்பார்த்து இருப்பவர்களின் ஆசை நிராசையாகிவிடும்.
எம்.எல்.ஏ. கருணாஸ் நிபந்தனை ஜாமீனில் இருப்பதால் அவரால் இங்கு வரமுடியவில்லை. சபாநாயகர் செய்தது தவறு என்பதை நிரூபிக்க சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்படும். அதேசமயம் அந்த 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் மனுவை வாபஸ் பெற்று தேர்தலை சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து அவர், மதுரையில் உள்ள மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்திற்கு சென்று குருபூஜை விழாவில் கலந்துகொண்டார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் அவருடன் சென்றனர்.
அங்கு தினகரன் நிருபர்களிடம் கூறும்போது, “சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதால் நீதி தாமதமாகும் என்ற எண்ணம் உள்ளது. எனவே மேல்முறையீடு செய்வது குறித்து மக்களை சந்தித்தபின் முடிவு செய்யப்படும். இதற்காக 18 பேரும் தங்கள் தொகுதிக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளனர். தீயசக்திகள் எங்களை மேல்முறையீடு செய்ய வைக்க முயற்சிக் கின்றனர்” என்றார்.