இனி வாலாட்ட முடியாது; போலீஸ் ரோந்துப்பணியில் புதிய மாற்றம்: புதிய தொழில் நுட்பத்துடன் சென்னை காவல்துறை
போலீஸாருக்கு நவீன ரோந்து ஜாக்கேட்டை அணிவிக்கிறார் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், அருகில் கூடுதல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், இணை ஆணையர் மகேஷ்வரி, துணை ஆணையர் அரவிந்தன்
சென்னை போலீஸில் அறிவியல் தொழில் நுட்பத்துடன் புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இனி விஐபியாக இருந்தாலும், குற்றவாளியாக இருந்தாலும் போலீஸிடம் வாலாட்ட முடியாது. போலீஸாரும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடக்கும் நடைமுறையும் அமலுக்கு வரும்.
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நடந்த குற்றங்களில் குற்றவாளிகளை கைது செய்யவும் சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன. மேலும், பல குற்றச் சம்பவங்கள், அசம்பாவிதங்கள், வாகன விபத்துக்கள் மற்றும் வன்முறை சம்பவங்களின் போது உண்மை தன்மையை அறிந்து கொள்வதற்கு சிசிடிவி கேமரா காட்சிகள் பெரிதும் உதவியுள்ளன.
சென்னையில் கண்காணிப்புக்கேமரா மூலம் குற்றங்களை கண்காணித்து களைவதில் தி.நகர் துணை ஆணையர் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் எப்போதும் முன்னுதாரண வழிகாட்டியாக செயல்பட்டு வந்துள்ளது. இதற்கு முன்னர் தி.நகர் துணை ஆணையராக இருந்த சரவணன் தனது முன் முயற்சியினால் தனது எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தும் நடவடிக்கையில் வெற்றிபெற்றார்.
இதன்மூலம் தி.நகர் துணை ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்களில் சென்னையிலேயே அதிக அளவிலான குற்றங்கள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்து அவர் மாற்றப்பட்டப்பின் வந்த துணை ஆணையர் அரவிந்தன் பொறியியல் பட்டம் படித்தவர் என்பதால் தி.நகர் துணை ஆணையராக அவர் செயல்படும் காலகட்டத்தில் மேலும் சில அறிவியல் மாற்றங்களை காவல் ஆணையர் அனுமதியுடன் அமல்படுத்தி வருவது பொதுமக்கள், வியாபாரிகளின் பாராட்டைப்பெற்றுள்ளது.
காவல்பணி தினசரி குற்றவாளிகளுடன் செலவழிப்பது என்பதைத்தாண்டி அதை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தும் நிகழ்வு வரவேற்கக்கூடிய ஒன்று. செல்போனில் பேஸ் டிடெக்டர் செயலியை அறிமுகப்படுத்திய துணை ஆணையர் அரவிந்த் அடுத்தக்கட்டமாக ரோந்து போலீஸார் உடலிலேயே அணியும் நவீன அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய ஜாக்கெட்டை உருவாக்கியுள்ளார்.
கேமரா பொருத்தப்பட்டுள்ள அதி நவீன ஜாக்கெட் பல சிறப்பு அம்சங்களை கொண்டது. ஜி.பி.எஸ் வசதி கொண்டுள்ளது. அதிக வெளிச்சம் தர கூடிய டார்ச்லைட். ரோந்துப்பணிக்கு தேவையான பொருட்களை வைத்து கொள்ள கூடிய வசதி, ரோந்து காவலுக்கு உதவி அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கைபேசி செயலி, ரோந்து காவலை நேரலையில் கண்காணிக்கும் மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள கண்காணிக்கு சிஸ்டம்.
இது தவிர ரோந்துக்காவலர் தன் ரோந்து காவலை துவங்குவதிலிருந்து அவர் ஜாக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் செயல்பட தொடங்கிவிடும், அவர் ரோந்துப்பணி செய்யும் இடங்கள் அனைத்தும் ஒளி மற்றும் ஓலி ஆகியவையும் பதிவு செய்து விடும். மேலும் ரோந்துக்காவலர் செல்லும் இடத்தினை காவல் நிலையத்திலிருந்து கண்காணிக்கலாம்.
ரோந்துக் காவலரின் இடத்தினை அறிந்த பின் அதற்கேற்றவாறு அவசர தொலை பேசி அழைப்புகளை அருகாமையில் உள்ள காவலர்களிடம் பரிமாற்றம் செய்து வழிநடத்த ஏதுவாக இருக்கும். ரோந்துக்காவலர் ஜாக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் அந்த காவல் நிலையங்களில் உள்ள கணிணிகளில் சேமித்து வைக்கப்படும்.
இதன்மூலம் பொதுமக்கள் மற்றும் காவல் துறையினரின் பாதுகாப்பு மேம்படும். ரோந்துக்காவலர் தனது பணியை சரியாக செய்ய முடியும். காவலரிடம் தேவையின்றி வாக்குவாதத்தில், கைகலப்பில் ஈடுபடுபவர்கள் சிக்குவர், காவ்லர்களும் பொதுமக்களிடம் கண்ணியத்துடன் நடக்கும் வகையில் பணி கண்காணிக்கப்படும்.
ரோந்துக்காவலின் செயல் திறனும் மேம்படுத்தப்படும். ஆதாரங்களை சிறப்பாக நிர்வகிக்கலாம். இதன்மூலம் சென்னை போலீஸாரின் காவற்பணி அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது. விரைவில் இந்த மாற்றம் சென்னை முழுதும் உள்ள காவல் நிலையங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது.
இது தவிர இன்னொரு தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். தீபவாளியை பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் பொருட்கள் வாங்க அதிகளவில் கூடும் மாம்பலம் மற்றும் பாண்டி பஜார் காவல் நிலைய எல்லையில் முக்கியமான இடங்களில் 750 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது.
இது தவிர மக்கள் அதிகம் கூடும் ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு, மற்றும் தி.நகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் குற்றவாளிகள் நடமாடினால் சி.சி.டிவி கேமராவில் பதிவாகும் பதிவுகளை வைத்து அவர்களை எளிதில் கண்டுபிடிக்க கூடிய தொழில் நுட்பத்துடன் கூடிய அதி நவீன 10 சிசிடிவி கேமராக்கள் (Face Detector Technology CCTV camera ) பொறுத்தப்பட்டுள்ளது.
இன்று நடந்த விழாவில் தி.நகர் காவல் மாவட்டத்தில் உள்ள 15 ரோந்து காவலர்களுக்கு கேமரா பொருத்தப்பட்ட அதி நவீன உபகரணங்கள் அடங்கிய ஜாக்கெட்டை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வழங்கினார். குற்றங்கள் நவீனமாகும்போதும், புதிய குற்றவாளிகள் குற்றச்செயல்களில் ஈடுபடும்போதும் காவல்துறையும் அதற்கேற்ப மாறவேண்டும். அதற்கு நிர்வாகத் திறன்மிக்க அதிகாரிகள் பணியில் இருக்கவேண்டும். அது தற்போது சென்னையில் சாத்தியமாகியுள்ளது.