Breaking News
குல்பி ஐஸ் விற்கும் அர்ஜுனா விருது பெற்ற இந்திய குத்துச்சண்டை வீரர்

அரியானாவை சேர்ந்த பாக்ஸிங் வீரர் தினேஷ்குமார்( வயது 30) . அர்ஜுனா விருதுபெற்றவர். தற்போது இவர் பிவானி மாவட்ட தெருக்களில் குல்பி ஐஸ் விற்கிறார்.

அரியானாவின் பிள்ளையாக இந்தியாவில் நடந்த தேசிய, சர்வதேசப் போட்டிகளில் குத்துச்சண்டையில் ஜூனியர் போட்டிகளில் வென்று வாகை சூடியவர் தினேஷ் குமார். 17 தங்கப்பதக்கங்கள், 1 வெள்ளி, 5 வெண்கலப்பதக்கங்கள் வென்ற இவர் ஒலிம்பிக் வரை சென்றுள்ளார்.

இதற்காக இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருதை தனது 22 வது வயதில் குடியரசுத் தலைவரிடம் பெற்றார்.

2014-ம் ஆண்டு தினேஷ் குமார் சென்ற கார் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அதோடு முடிந்துபோனது அவரது பாக்ஸிங் வாழ்வு. விபத்தில் சிக்கிய தினேஷ் குமாருக்கு அரசாங்கமும், விளையாட்டுத் துறையும் உதவ முன் வரவில்லை.

யாரும் உதவாத நிலையில் தினேஷ் குமாரின் தந்தை மகனின் சிகிச்சைக்காக செலவு செய்ய லட்சக்கணக்கில் கடன் வாங்க நேர்ந்தது. ஏற்கெனவே மகன் பாக்ஸிங்கில் பெரிய வீரனாக வரவேண்டும் என்பதற்காக வெளிநாடு செல்ல, பயிற்சி என லட்சக்கணக்கில் அவர் கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில் சிகிச்சைக்கான கடனும் சேர்ந்து மிகவும் நொடிந்துபோகும் நிலைக்கு தினேஷ் குமார் குடும்பம் தள்ளப்பட்டது.

தனது உடல் நிலை தேறி மீண்டும் பாக்ஸிங்கில் காலூன்றும் அளவுக்கு தினேஷ் குமார் தயாரானாலும், கடனுக்கான வட்டியே பெரும் தொகையாக மாதாமாதம் கட்டவேண்டிய நிலையில் நெருக்கடியைச் சந்தித்தார். இந்நிலையில் தனது தந்தைக்கு உதவு வேண்டிய சூழலில் தள்ளப்பட்டார். அரசாங்க உதவியும் இல்லாத நிலையில் தற்போது தெருவில் குல்பி ஐஸ் விற்கிறார். இதன்மூலம் வரும் வருமானத்தில் தாங்கள் வாங்கிய கடனுக்கான வட்டியைக் கட்ட முடிகிறது என தினேஷ் குமார் தெரிவிக்கிறார்.

தனக்கு அரசு வேலை ஒதுக்க வேண்டும், தற்போதும் முழு உடல் தகுதியுடன் இருக்கும் தான் ஜூனியர் அளவிலான குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்து பதக்கம் வாங்கும் அளவுக்கு தயார்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள தினேஷ் குமார் அரசு தனக்கு வாய்ப்பு கொடுத்தால் தேசிய அளவில் பதக்கம் பெறும் வகையில் பல வீரர்களைத் தயார்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.