வைரமுத்துக்கு ஆதரவாக பாடல் வெளியிட்ட மதன் கார்க்கி
‘மீ டூ’ இயக்கம் திரையுலகினரை உலுக்கி வருகிறது. சினிமா பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி அதிர வைத்துள்ளார். வெளிநாட்டுக்கு இசைநிகழ்ச்சி நடத்த சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறினார். பாலியல் சம்பவம் நடந்தபிறகு வைரமுத்துவை திருமணத்துக்கு அழைத்த சின்மயியை சமூக வலைத்தளத்தில் விமர்சித்தும் வருகிறார்கள்.
இந்த பிரச்சினை குறித்து இதுவரை கருத்து சொல்லாமல் இருந்த வைரமுத்துவின் மகனும் பாடலாசிரியருமான மதன் கார்க்கி ரஜினிகாந்தின் லிங்கா படத்தில் இடம்பெற்ற பாடல் ஆடியோவை தனது டுவிட்டரில் வெளியிட்டு அவருக்கு ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நேர்மையாக மக்களுக்கு உழைக்கும் ரஜினிகாந்தை பழி சொல்லும் காட்சியில் இந்த பாடல் இடம்பெற்று இருந்தது. வைரமுத்துவே எழுதி இருந்தார். பாடல் வரிகள் வருமாறு:-
“உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன்பேர் சொல்லும். அன்று ஊரே போற்றும் மனிதன். நீயே நீயடா. பொய்கள் புயல்போல் வீசும். ஆனால் உண்மை மெதுவாய் பேசும். அன்று நீயே வாழ்வில் வெல்வாய். கலங்காதே. கரையாதே. ராமனும் அழுதான் தர்மனும் அழுதான். நீயோ அழவில்லை. உனக்கோ அழிவில்லை.
சிரித்து வரும் சிங்கம் உண்டு. புன்னகைக்கும் புலிகள் உண்டு. உரையாடி உயிர் குடிக்கும் ஓநாயும் உண்டு. பொன்னாடை போர்த்தி விட்டு உன்னாடை அவிழ்ப்பதுண்டு. பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு. பள்ளத்தில் ஊர் யானை விழுந்தாலும் அதன் உள்ளத்தை வீழ்த்திட முடியாது. கெட்டாலும் நம் தலைவன் இப்போதும் ராஜன். கரையாதே கலங்காதே.”
இவ்வாறு பாடலில் வரிகள் உள்ளன.