இலங்கையின் புதிய பிரதமரானார் ராஜபக்சே
இலங்கையின் புதிய பிரதமராக, ராஜபக்சே நேற்று முறைப்படி பொறுப்பேற்றார்.இலங்கையில், 2015ல் நடந்த அதிபர் தேர்தலின் போது, யு.பி.எப்.ஏ., எனப்படும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி வேட்பாளரான, மைத்ரிபால சிறிசேனவுக்கு, ரணில் விக்கிரமசிங்கேவின், யு.என்.பி., எனப்படும், ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு அளித்தது.தேர்தலில் வெற்றி பெற்ற சிறிசேன, அதிபராகவும்; ரணில், பிரதமராகவும் பதவியேற்றனர்.இந்தாண்டு பிப்ரவரியில், இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ராஜபக்சே தலைமையிலான, இலங்கை சுதந்திர முன்னணி, அதிக இடங்களில் வெற்றி பெற்றது.இதனால், அடுத்த பொதுத் தேர்தலில், ராஜபக்சேவின் கை ஓங்கும் நிலை உருவானது. இதையடுத்து, ரணிலிடம் இருந்து, சிறிசேன, விலகத் துவங்கினார்.அதன் தொடர்ச்சியாக, யு.என்.பி., உடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாகவும், பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்குவதாகவும், சிறிசேன சமீபத்தில் அறிவித்தார்.மேலும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவுடன் கூட்டணி அமைத்ததோடு, அவரை பிரதமராகவும் நியமித்தார்.இதற்கிடையே, இலங்கை பிரதமராக, ரணில் விக்கிரமசிங்கேவை அங்கீகரிப்பதாக, அந்த நாட்டு, பார்லிமென்ட் சபாநாயகர் ஜெயசூர்யா, நேற்று முன்தினம் அறிவித்தார்.இதனால், இலங்கை அரசியலில் உச்சகட்ட குழப்பம் நிலவும் சூழலில், அந்நாட்டின், 22வது பிரதமராக, ராஜபக்சே நேற்று முறைப்படி பொறுப்பேற்றார். பிரதமர் அலுவலகம் சென்று, தன் அலுவல்களை கவனிக்க துவங்கினார்.’நிதி, சட்டம் – ஒழுங்கு, உள்துறை மற்றும் வெளியுறவு ஆகிய துறைகளுக்கு, புதிய அமைச்சர்கள் உடனடியாக நியமிக்கப்படுவர்’ என, அதிகாரிகள்தெரிவித்தனர்.இலங்கை அரசியல்: அமெரிக்கா கவலை’இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க, உடனடியாக பார்லிமென்டை கூட்டுவதே சரியாக இருக்கும்’ என, அமெரிக்கா கூறியுள்ளது.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கையில் நிகழும் அரசியல் குழப்பங்களை, அமெரிக்கா கவலையுடன் கவனித்து வருகிறது.உடனடியாக பார்லிமென்டை கூட்டி, ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலம், யார் பிரதமராக வேண்டும் என்பதை, அதிபர் சிறிசேன முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஐ.நா., கருத்துஇலங்கை நிலவரம் குறித்து, ஐ.நா., பொதுச் செயலர் ஆன்டோனியோ கட்டர்ஸ் சார்பில், வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இலங்கை அரசு, ஜனநாயகத்திற்கும், அரசியல் சாசன விதிகளுக்கும் மதிப்பளித்து, மக்களின் பாதுகாப்பை மனதில் வைத்து செயல்பட வேண்டும். இந்த பிரச்னைக்கு சுமுக தீர்வு காண, இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், இணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.முன்னாள் அமைச்சர் ரனதுங்க கைதுஇலங்கையின் புதிய பிரதமராக, ராஜபக்சே பொறுப்பேற்ற பின், பழைய அமைச்சரவை கலைக்கப்பட்டு விட்டதாக, அதிபர் சிறிசேன அறிவித்தார். இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலக வாசலில், ராஜபக்சேவின் ஆதரவாளர்கள், நேற்று முன்தினம் குழுமி இருந்தனர்.அப்போது, முன்னாள் எண்ணெய் வளத்துறை அமைச்சரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான அர்ஜுனா ரனதுங்க உட்பட, பதவி இழந்த அமைச்சர்கள் சிலர், பிரதமர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை, ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது.இதையடுத்து, ரனதுங்கவின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டதில், ஒருவர் உயிரிழந்தார்; இருவர் காயம் அடைந்தனர். இதன் காரணமாக, அர்ஜுனா ரனதுங்கவை, போலீசார் நேற்று கைது செய்தனர். பின், அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.