ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துவிட்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி
இந்தியா-ஜப்பான் இடையே 13-வது வருடாந்திர உச்சி மாநாடு டோக்கியோ நகரில் நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் டோக்கியோ சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து யமனாஷி நகருக்கு பயணமானார். அங்கு அவர் அந்நாட்டின் பிரதமர் ஷின்ஜோ அபேயை சாதாரண முறையில் சந்தித்து பேசினார்.
இரு தலைவர்களுக்கும் இடையே டோக்கியோ நகரின் கான்டெய் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நேற்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது, இரு நாடுகளின் உறவு, பிராந்திய மற்றும் இந்திய-பசிபிக் பெருங்கடல் பிரச்சினை தொடர்பாக அவர்கள் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து இரு தலைவர்களின் முன்னிலையில் மின்னணு தொழில் நுட்பம், இணைய பாதுகாப்பு, இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான யோகா- ஆயுர்வேதம் மற்றும் தேசிய பாதுகாப்பு சுகாதார இயக்கத்தில் இணைந்து பணியாற்றுவது, ராணுவம், கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பு, விண்வெளி அறிவியல்துறை ஆகிய 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனது.
தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ஜப்பான் பயணத்தை நிறைவு செய்துவிட்டு நள்ளிரவு நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையம் வந்த பிரதமரை அதிகாரிகள் வரவேற்றனர்.