Breaking News
பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் தோல்வி

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று முன்தினம் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 50 ரன்னும் (40 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), பர்ஹான் 39 ரன்னும் (38 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன்), முகமது ஹபீஸ் ஆட்டம் இழக்காமல் 32 ரன்னும் (20 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) எடுத்தனர். பின்னர் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 19.1 ஓவர்களில் 117 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் வீரர்கள் ஷதாப் கான் ஆட்டநாயகன் விருதையும், பாபர் அசாம் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. ஏற்கனவே நடந்த டெஸ்ட் போட்டி தொடரிலும் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் வென்று இருந்தது. இந்த போட்டி தொடர் முடிவில் வெளியிடப்பட்ட 20 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 4 இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.