தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் 17 பேர் பயன்படுத்தி வந்த விடுதி அறைகளுக்கு ‘சீல்’ வெற்றிவேலுக்கு 2 நாள் அவகாசம்
டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.க்கள் தமிழக கவர்னரை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பதவியில் இருந்து நீக்க மனு அளித்தது தொடர்பாக சபாநாயகர் ப.தனபால் அவர்களை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த தகுதிநீக்கத்தை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு கடந்த 25-ந்தேதி வெளியானது. அதில் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் ப.தன்பால் வழங்கிய உத்தரவு செல்லும் என்று நீதிபதி அறிவித்தார்.
இந்தநிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் 17 பேர் பயன்படுத்தி வந்த சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள விடுதி அறைகளை பூட்டி ‘சீல்’ வைக்க சட்டசபை செயலாளர் உத்தரவு பிறப்பித்தார்.
வெற்றிவேலுக்கு விடுதியில் ‘டி’ பிளாக்கில் அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. அவருக்கு மட்டும் 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளன. அவரது அறையில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் தங்கி இருப்பதால் இந்த அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. மற்ற 17 பேர் பயன்படுத்திய விடுதி அறைகளுக்கு நேற்று முன்தினம் இரவு பூட்டு போட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும், சட்டசபை செயலாளர், தகுதிநீக்கம் செய்யயப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பி இருந்த நோட்டீஸ் நகலும் விடுதி அறையின் கதவில் ஒட்டப்பட்டது.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் கடந்த 12 மாதங்களாக (மாதம் ஒன்றுக்கு ரூ.250 வீதம்) விடுதி அறைக்கு வாடகை தொகை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு தமிழக சட்டசபை செயலாளர் கே.ஸ்ரீனிவாசன் அனுப்பிய நோட்டீசில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டசபை உறுப்பினர் பதவியில் இருந்து உங்களை 18-9-2017 அன்று தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். தகுதி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளதால் எம்.எல்.ஏ. விடுதி அறை உள்பட சட்டசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வசதிகளை பெறுவதற்கு நீங்கள் தகுதி இல்லாதவராக கருதப்படுகிறீர்கள்.
தகுதிநீக்கம் செய்து ஆணை பிறப்பித்த பின்னரும் நீங்கள் எம்.எல்.ஏ. விடுதி அறையை காலி செய்யவில்லை. அதனால் சபாநாயகர் உத்தரவின்படி உங்களுக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. விடுதி நிர்வாக செயலாளர் முன்னிலையில் எம்.எல்.ஏ. குடியிருப்பில் உள்ள உங்கள் பொருட்களை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அதற்கு முன்பு விடுதி நிர்வாக செயலாளருக்கு 044-25333686 என்ற எண்ணில் முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு, காலி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் நீங்கள் நிலுவையில் உள்ள வாடகை தொகையை உடனடியாக செலுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் விடுதி அறையின் கதவில், சட்டசபை செயலாளர் (விடுதி நிர்வாகம்) தரப்பில் ஒட்டப்பட்டு இருந்த நோட்டீசில், ‘இந்த குடியிருப்பு இச்செயலகம் வசம் எடுத்துக்கொள்ளப்பட்டது. எனவே சார்பு செயலாளர் (விடுதி நிர்வாகம்) அனுமதி பெறாமல் யாரும் திறக்கக்கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.