முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி: போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தமா?
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ.6,800 கோடி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். போக்குவரத்து துறையில் ஏற்படும் வரவுக்கும், செலவுக்கும் இடையேயான தொகையை அரசு ஈடு செய்யவேண்டும். பண்டிகை முன்பணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை தீர்ப்பது தொடர்பாக தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த மாதம் 22-ந் தேதி மற்றும் 29-ந் தேதிகளில் 2 கட்டமாக நடந்தது. தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக போக்குவரத்து கழகம் வாய்மொழியாக தெரிவித்தது.
இந்த நிலையில் 3-வது கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் கமிஷனர் அலுவலகத்தில், துணை கமிஷனர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
இதில் தொ.மு.ச., ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ்., பாட்டாளி தொழிற்சங்கம் உள்பட 14 சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். போக்குவரத்து கழக நிர்வாகம் தரப்பில் மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அன்பு ஆபிரகாம், அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.
மாலை 4 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை 5.45 மணி வரை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
இதுகுறித்து தொ.மு.ச. பொருளாளர் நடராஜன், சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
எங்கள் பிரச்சினைகள் ஏராளமாக இருக்கிறது. எனினும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் இந்த பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று விரும்பினோம்.
எங்களை வேலைநிறுத்தத்தை நோக்கி தள்ளுகிற போக்கைத்தான் இந்த அரசும், நிர்வாகமும் கடைப்பிடிக்கின்றன. எனவே அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து சென்னை பல்லவன் இல்லம் முன்பு 2-ந் தேதி (நாளை) ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.
இந்த கூட்டத்தில் வேலைநிறுத்தத்துக்கான தேதி அறிவிக்கப்படும். அரசு இதற்கு முன்னதாக எங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன் வந்தால் நாங்கள் எங்கள் முடிவை பரிசீலிப்போம். இல்லை என்றால் 2-ந் தேதி வேலைநிறுத்த போராட்ட தேதி உறுதியாக அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.