உலக கடல்கள் வெப்பத்தை உறிஞ்சுவதால் 60 சதவீதம் வேகத்தில் வெப்பமடைகிறது – புதிய ஆய்வில் தகவல்
பெட்ரோல் – டீசல் ஆகியவற்றை பயன்படுத்துவதால் வெளியாகும் வெப்பத்தை உலகத்தின் பெருங்கடல்கள் முன்பு நினைத்ததைவிட அதிகமாக உறிஞ்சுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
முன்னர் நினைத்த அளவைவிட 60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்கள் உறிஞ்சுவதாக நேச்சர் ஆய்வு பத்திரிகையில் வெளியான புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
பெட்ரோல் டீசல் போன்ற படிம எரிபொருள்கள் வெளியிடும் மாசுகள், வெப்பம் ஆகியவை புவியை ஏற்கெனவே நினைத்த அளவைவிட அதிகம் பாதிக்கிறது என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது.
புவி வெப்பமாதலைத் தடுப்பதற்கான இலக்குகளை எட்டுவது மேலும் அதிக சவால் நிறைந்ததாக இருக்கப்போகிறது என்பதுதான் இந்த ஆய்வு உணர்த்தும் செய்தி.
பசுமை இல்ல வாயுக்கள் என்பவை, புவியில் இருந்து வெளியாகும் வெப்பம் புவி மண்டலத்தைக் கடந்து போகாமல் தடுத்து புவி வெப்பமாவதற்கு காரணமாகின்றன. இதையே விஞ்ஞானிகள் பசுமை இல்ல விளைவு என்கிறார்கள்.
பசுமை இல்ல விளைவால் சிறைப்பட்ட மிகை வெப்பத்தில் 90 சதவீதத்தை கடல்கள் உறிஞ்சுகின்றன என்பது பருவநிலை மாற்றம் தொடர்பான குழு (ஐ.பி.சி.சி.) சமீபத்தில் செய்த மதிப்பீடு.
ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் உலகம் முழுவதும் மின்சாரம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தியதைப் போல 150 மடங்கு ஆற்றலை வெப்பமாக நாம் கடலில் கலக்கிறோம் என்கிறது இந்தப் புதிய ஆராய்ச்சி.
இது ஏற்கெனவே செய்த மதிப்பீடுகளைவிட 60 சதவீதம் கூடுதல்.
மனித நடவடிக்கைகளால் வெளியாகும் பசுமை இல்ல வாயுக்கள் எவ்வளவு மிகை வெப்பத்துக்கு காரணமாகின்றன என்பதை மதிப்பிட்டு அதன் அடிப்படையில்தான் புவி எவ்வளவு வெப்பமாகிறது என்று விஞ்ஞானிகள் கணக்கிடுகின்றனர்.
புதிய கணக்கீடுகளின்படி நாம் நினைத்ததைவிட பசுமை இல்ல வாயுக்களால் அதிக வெப்பமும் உற்பத்தியும் ஆகிறது. நாம் நினைத்ததைவிட அதிகமான வெப்பத்தை கடலும் உறிஞ்சுகிறது. ஒரே அளவு கரியமில வாயுவில் இருந்து அதிக அளவு வெப்பம் ஏற்படுகிறது என்றால், இவ்வாயுவின் தாக்கம் நினைத்ததைவிட அதிகமாக புவியின் மீது செயல்படுகிறது என்று பொருள்.
முன்பு நினைத்ததைவிட கடல் அதிக வெப்பத்தை உறிஞ்சுவதாக சொல்கிறது புதிய ஆய்வு. தொழிற்புரட்சிக்கு முன்பு இருந்த புவி வெப்ப நிலையை விட 1.5 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்ப நிலை உயராமல் பாதுகாக்கவேண்டும் என்று ஐ.பி.சி.சி. அண்மையில் குறிப்பிட்டது. பாரிஸ் பருவநிலை உடன்படிக்கையிலும் புவி வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன.
இந்த இலக்குகளை அடைவது கடினமாகும் என்பதை புதிய ஆராய்ச்சியின் முடிவுகள் காட்டுகின்றன.
இலக்குகளை அடைவது கடினமாக இருக்கும் என்ற கருத்தை வலியுறுத்துகிறார் நியூ ஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் லாரி ரெஸ்பிளாண்டி.
இந்த புதிய ஆய்வின்படி புவி வெப்பநிலை அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்கான இலக்குகளை அடைய வேண்டும் என்றால் முன்பு நினைத்ததைவிட மனித நடவடிக்கைகளை மேலும் 25 சதவீதம் கூடுதலாக குறைக்கவேண்டும்.
கடல்கள் அதிக வெப்பமாவதால் கடல் நீரில் ஆக்சிஜன் அளவு குறையும். இதனால் பல கடல் வாழ் உயிரினங்களைப் பாதிக்கும் என்கிறார் அவர். கடல் வெப்ப நிலை உயர்வதால், வெப்பத்தால் பொருள்கள் விரிவடையும் என்ற விதிப்படி கடல் விரிவடைந்து கடல் மட்டம் உயரும்.
மேலும் கடல் வெப்பம் அதிகரிக்கும்போது அது அதிக அளவிலான கரியமில வாயுவையும், ஆக்சிஜனையும் வெளியிடும்; இந்த வாயுக்களை தக்கவைத்துக்கொள்ளும் கடலின் திறன் குறையும் என்றும் கூறுகிறார் ரெஸ்பிளாண்டி.