சிறையில் உள்ள 7 பேரை விடுவிப்பது குறித்து கவர்னர் இன்னும் முடிவு எடுக்காதது ஏன்? பரபரப்பு தகவல்கள்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், அதே ஆண்டு ஜூன் 11-ந் தேதி பேரறிவாளனும், ஜூன் 14-ந்தேதி நளினியும், அவரது கணவர் ஸ்ரீகரன் என்ற முருகனும், ஜூலை 22-ந்தேதி சுரேந்திர ராஜா என்ற சாந்தனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 1998-ம் ஆண்டு ஜனவரி 28-ந் தேதி, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 26 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து அனைவரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில், 1999-ம் ஆண்டு ஜனவரி 28-ந் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேரின் தூக்குத் தண்டனை மட்டும் உறுதி செய்யப்பட்டது. ஏனைய 19 பேரும் தண்டனை காலத்தை முடித்து விட்டதாக கூறி விடுதலை செய்யப்பட்டனர். ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்தநிலையில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேரும் 1999-ம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி கவர்னருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். அப்போது, கவர்னராக இருந்த பாத்திமா பீவி இந்த கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார். கவர்னரின் முடிவை எதிர்த்து 4 பேரும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அதே ஆண்டு நவம்பர் மாதம் 25-ந் தேதி கவர்னரின் உத்தரவை ரத்து செய்த ஐகோர்ட்டு அமைச்சரவை முடிவின் மீதே கவர்னர் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியது. இந்தநிலையில், 2000-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், நளினியின் தூக்குத் தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாக குறைக்க கவர்னருக்கு பரிந்துரைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, ஏப்ரல் 24-ந் தேதி வெளியிடப்பட்ட தமிழக அரசாணையில், நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 26-ந்தேதி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்பினர். 2000-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த கே.ஆர்.நாராயணனும், 2007-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாமும் இந்த கருணை மனுக்களை நிலுவையில் வைத்தனர். 2011-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பாட்டீல் ஆகஸ்டு 12-ந் தேதி அந்த கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார்.
இந்த நிலையில், 2014-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி நீதிபதி சதாசிவம் தலைமையிலான 3 பேர் அமர்வு, பல ஆண்டு காலம் 3 பேரின் கருணை மனுக்களும் எந்தக் காரணமுமின்றி நிலுவையில் இருந்ததால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தது.
பிப்ரவரி 19-ந்தேதி தமிழக அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின்படி, ராஜீவ்காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதாக அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். “குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, வழக்கை மத்தியப் புலனாய்வுத்துறை விசாரித்திருந்தால், மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என கூறப்படுவதால் மத்திய அரசுக்கு தெரியப்படுத்துவதாகவும் 3 நாட்களில் 7 பேரும் விடுவிக்கப்படுவார்கள்” என்றும் ஜெயலலிதா கூறினார்.
தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்த மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டு மூலம் 7 பேரையும் 3 நாட்களுக்குள் விடுவிப்பதை தடுத்து நிறுத்தி தடையாணையும் பெற்றது. அதற்கு காரணமாக, சி.பி.ஐ. விசாரித்த வழக்குகளில் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என்று மத்திய அரசு கூறியது.
இந்த வழக்கில், மத்திய – மாநில அரசுகளின் அதிகாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வருவதால், 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந் தேதி, இந்த வழக்கு விசாரணை நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையிலான 5 பேர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. 2015-ம் ஆண்டு டிசம்பர் 2-ந்தேதி தீர்ப்பளித்த 5 பேர் அமர்வு, “சி.பி.ஐ. விசாரித்த வழக்கின் குற்றவாளிகளை மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது” என்று கூறியது.
ஆனால், தமிழக அரசு 161-வது சட்டப் பிரிவின் கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை என்று கூறியது. இந்த கருத்துகளின் அடிப்படையில் வழக்கை தீர்மானிக்க, 3 பேர் அடங்கிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்தநிலையில், 2016-ம் ஆண்டு மார்ச் 2-ந்தேதி, 7 பேரையும் விடுவிக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியது.
இந்த ஆண்டு செப்டம்பர் 6-ந்தேதி, 7 பேரையும் விடுவிப்பது குறித்து அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் கவர்னர் முடிவெடுக்க வேண்டும் என ரஞ்சன் கோகய் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு 3 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 9-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய தமிழக அமைச்சரவை கூட்டத்தில், 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரைப்பது என்று முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உடனடியாக, இந்த தீர்மானம் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், 7 பேர் தொடர்பான கோப்புகளையும் செப்டம்பர் 11-ந் தேதி கவர்னருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. இதற்கிடையே, தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். இந்த நிலையில், செப்டம்பர் 13-ந்தேதி இந்த விஷயம் தொடர்பாக மத்திய உள்துறைக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிக்கை ஒன்றை அனுப்பினார்.
ஆனால், சுமார் 50 நாட்கள் ஆன நிலையிலும், இந்த விவகாரத்தில் உண்மை நிலை வெளிவராமல் இருந்து வந்தது. தற்போது, அதற்கான காரணம் தெரியவந்துள்ளது. அதாவது, தமிழக அரசிடம் இருந்து தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் சிறையில் உள்ள 3 பேரை விடுதலை செய்வது குறித்தும், ராஜீவ்காந்தி கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்வது குறித்தும் பரிந்துரைக்கு சென்றுள்ளது.
இதுகுறித்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதன்படி, தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் சிறையில் உள்ள 3 பேரை விடுதலை செய்வதை ஏற்க முடியாது என்று அந்தப் பரிந்துரையை நிராகரித்துவிட்டார். ஆனால், 7 பேரை விடுவிப்பதில் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறார்.
ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டபோது, அவருடன் பலர் உயிரிழந்தனர். அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் 7 பேரையும் விடுதலை செய்யக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
எனவே, இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, தாம் எந்தவித முடிவும் எடுக்க முடியாது என்பதால்தான், கவர்னர் பன்வாரிலால் புரோகித் 7 பேர் விடுதலை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளின் மீது முடிவு தெரிந்த பிறகே கவர்னரும் தனது முடிவை அறிவிப்பார் என்று தெரிகிறது.