20 ஓவர் போட்டி அணியில் டோனி இடம்பெறாதது ஏன்? கேப்டன் கோலி பதில்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று அளித்த பேட்டி வருமாறு:-
இன்றைய ஆட்டத்தில் ‘டாஸ்’ ஜெயித்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யும் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் முதலில் பேட் செய்வதாக அறிவித்த போது, ஆச்சரியம் அடைந்தேன். நாங்கள் முதலில் பந்து வீசவே விரும்பினோம். அதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்பு தானாகவே கிடைத்தது. முந்தைய ஆட்டத்தில் அவர்கள் 2-வது பேட்டிங் செய்து குறைந்த ரன்களில் வீழ்ந்தனர். அதனால் இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்து, கணிசமாக ரன்கள் குவித்து நெருக்கடி கொடுக்கலாம் என்ற நினைப்பில் முதலில் பேட்டிங் முடிவுக்கு வந்திருக்கலாம். எங்களுக்கு இது ஒரு திருப்திகரமான ஆட்டமாக அமைந்தது. எல்லா சிறப்பும் பவுலர்களையே சாரும்.
20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் டோனி இடம் பெறாதது ஏன் என்பது குறித்து தேர்வு குழுவினர் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டதாக நினைக்கிறேன். நீக்கம் முடிவு எடுப்பதற்கு முன்பாக தேர்வாளர்கள் முதலில் அவரிடம் தான் பேசியிருக்கிறார்கள். எனவே அது குறித்து நான் இங்கு உட்கார்ந்து பேசுவதற்கு அவசியம் இருப்பதாக தெரியவில்லை. டோனி சம்பந்தமாக தேர்வாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. இந்த விஷயத்தில் பல்வேறு விதமான கருத்துகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவை உண்மை அல்ல என்று உறுதி அளிக்கிறேன்.
டோனி இன்னும் இந்த அணியில் முக்கியமான வீரராகத் தான் இருக்கிறார். 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை ரிஷாப் பான்ட் போன்ற இளம் வீரர்கள் அதிக வாய்ப்பு பெற்றால் நன்றாக இருக்கும் என்று டோனி கருதுகிறார்.
ஒரு நாள் போட்டியில் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். அந்த கோணத்தில் பார்த்தால் அவர், இளம் வீரர்களுக்கு உதவுவதற்கு முயற்சிக்கிறார் என்றே தோன்றுகிறது. மற்றவர்கள் நினைப்பது போல் எதுவும் இல்லை. இவ்வாறு கோலி கூறினார்.