பிரதமர் மோடி பற்றி தவறான பேச்சு: சசி தரூர் மீது அவதூறு வழக்கு
பெங்களூருவில் சில தினங்களுக்கு முன் நடந்த இலக்கிய விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சசி தரூர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் ‘‘பிரதமர் மோடியை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் சிவலிங்கத்தின் மேல் இருக்கும் தேள் போன்றவர். அவரை கையால் அகற்றவும் முடியாது, செருப்பால் அடித்து விரட்டவும் முடியாது என்று ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஒருவர், எனக்கு தெரிந்த பத்திரிகையாளரிடம் கூறி இருக்கிறார்’’ என பேசினார்.
இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது இது தொடர்பாக டெல்லி கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் டெல்லி மாநில பாரதீய ஜனதா துணைத்தலைவர் ராஜீவ் பப்பர் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
வக்கீல் நீரஜ் மூலம் தாக்கல் செய்துள்ள அந்த வழக்கில் அவர், ‘‘நான் சிவ பக்தன். என்னைப் போன்ற சிவ பக்தர்களின் உணர்வுகளை காயப்படுத்துகிற விதத்தில் சசி தரூர் அவதூறாக பேசி உள்ளார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 499 மற்றும் 500 ஆகியவற்றின்படி வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறி உள்ளார்.
இந்த வழக்கை டெல்லி கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு சமர் விஷால், வரும் 16–ந் தேதி விசாரணைக்காக பட்டியலிட்டுள்ளார்.