அமலாக்கத்துறை வழக்கை முடிக்க ரூ.20 கோடி பேரம் கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி தலைமறைவு
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆர்.டி.நகர் அருகே கனகநகரில் நிதி நிறுவனம் நடத்தி வருபவர் சையத் அகமது பரீத். இவர், தான் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு அதிகவட்டி தருவதாக கூறி இருந்தார். இதனை நம்பி முதலீடு செய்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு பல கோடி ரூபாயை திரும்ப கொடுக்காமல் பரீத் மோசடி செய்திருந்தார்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பரீத்திற்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருந்தார்கள்.
இதுதொடர்பாக பரீத் மீது அமலாக்கத்துறையில் வழக்கும் பதிவானது. இந்த வழக்கில் இருந்து விடுபடவும், அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணையில் இருந்து தப்பிக்கவும், பா.ஜனதாவை சேர்ந்த கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டியின் உதவியை பரீத் நாடியுள்ளார். அமலாக்கத்துறை வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க பரீத்திடம் ரூ.20 கோடி பேரம் பேசியதுடன், பணத்திற்கு பதிலாக 57 கிலோ தங்க கட்டிகளை ஜனார்த்தனரெட்டி பெற்றுவிட்டு, தலைமறைவானதும் தெரியவந்துள்ளது.
4 தனிப்படைகள்
இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் சுனில்குமார் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘நிதி நிறுவன அதிபர் பரீத் மீது அமலாக்கத்துறையில் பதிவான வழக்கில் இருந்து, அவரை விடுவிக்க தனது உதவியாளர் அலிகான் மூலம் ரூ.18 கோடிக்கு 57 கிலோ தங்க கட்டிகளை ஜனார்த்தன ரெட்டி பெற்றிருப்பது உறுதியாகி உள்ளது.
ஜனார்த்தன ரெட்டி, உதவியாளர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜனார்த்தன ரெட்டியை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தற்போது அவர் தலைமறைவாகி விட்டது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜனார்த்தன ரெட்டியின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.
இவ்வாறு சுனில்குமார் கூறினார்.
இதற்கிடையில், நிதி நிறுவன அதிபருடன், ஜனார்த்தன ரெட்டி பேசும் புகைப்படங்கள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.