சபரிமலையில் 52 வயது பெண்ணை தாக்கிய விவகாரம் இளைஞர் கைது, போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்குப்பதிவு
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை எதிர்த்து போராட்டம் தொடர்கிறது. 5-ம் தேதி சிறப்பு பூஜைக்காக கோவில் திறக்கப்பட்டது. கடந்த மாதம் நடை திறக்கப்பட்ட போது தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்கள் தரிசனத்துக்கு வந்ததால், இந்த முறையும் அதுபோன்ற பெண்களை தடுத்து நிறுத்துவதற்காக ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் கூடியிருந்தனர். திருச்சூரை சேர்ந்த லலிதா ரவி (வயது 52) என்ற பெண் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சபரிமலைக்கு வந்தார்.
அப்போது அங்கே கூடியிருந்த பக்தர்கள் மற்றும் வலதுசாரி அமைப்பை சேர்ந்த தொண்டர்கள், லலிதாவை சுற்றி வளைத்தனர். பின்னர் அய்யப்ப கோஷங்களை எழுப்பியவாறே, அவரை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்தனர். உடனே அங்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களிடம் இருந்து லலிதாவை மீட்டனர். அப்போது அந்த பெண் தனது ஆதார் அட்டையை போலீசாரிடம் காட்டினார். அதில் அவரது வயது 52 என்று இருந்ததை பார்த்த போலீசார், அவரையும், உடன் வந்தவர்களையும் கோவிலுக்குள் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையே லலிதாவின் மீது தாக்குதல் நடத்திய 29 வயது இளைஞரை உயரதிகாரிகள் உத்தரவின் பெயரில் வழக்குப்பதிவு செய்து போலீஸ் கைது செய்துள்ளது. பத்தினம்திட்டா மாவட்டம் எழந்தூரைச் சேர்ந்த இளைஞர் சூரஜ் மீது ஐபிசி 308 (தாக்குதல் முயற்சி), 354 (பெண்ணைத் தாக்குதல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்விவகாரத்தில் தொடர்புடைய பிற குற்றவாளிகளை கைது செய்யவும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம், விசாரணை தொடர்கிறது என போலீஸ் கூறியுள்ளது.