உள்நாட்டுப்படைகள் அதிரடி தாக்குதல் ஈராக்கில் 3 பயங்கரவாத தலைவர்கள் சாவு
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அவர்களை போரிட்டு முற்றிலுமாய் அழித்து விட்டதாக கடந்த டிசம்பர் மாதம் அந்த நாட்டின் பிரதமராக இருந்த அல் அபாதி அறிவித்தார். இதே போன்று அங்கு தியாலா மாகாணம், ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து முழுமையாக மீட்கப்பட்டு விட்டதாக ஈராக் படைகள் 2014-ம் ஆண்டே அறிவித்திருந்தன.
ஆனால் அவ்வாறு ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு முழுமையாக ஒழிக்கப்பட்டு விடவில்லை. கடந்த சில மாதங்களாக அங்கு ஜலாவ்லா, சாதியாக், முக்ததியாக் பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும், உள்நாட்டுப்படைகளுக்கும் இடையே நடந்து வருகிற மோதல்களே இதற்கு சான்றாக அமைந்துள்ளன.
இந்த நிலையில் அங்கு பக்குபா நகரில் இருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ள மலைப்பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ஈராக் படைகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு ஈராக் படையினர் நேற்று முன்தினம் அங்கு முற்றுகையிட்டு அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் தலைவர்கள் 3 பேர் பலியாகினர். படை வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.