வசூலில் ரஜினியை மிஞ்சிய விஜய்: அரசியலுக்கு வருவாரா?
தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணியில் இருக்கும் விஜய், பாக்ஸ் ஆபீசிலும் மற்ற நடிகர்களை தெறிக்க விட்டு வருகிறார்.
தமிழகத்தில் இதுவரை வெளியான படங்களில் ஒரு நாள் வசூல் என்று பார்க்கும்போது கபாலி தான் முன்னணியில் இருந்தது. தமிழகம் முழுவதும் முதல் நாளில் கபாலி ரூ. 21.5 கோடி வசூல் செய்து இருந்தது. காலா படம் முதல் நாளில் ரூ. 15 கோடி வசூல் செய்து இருந்தது. இதுவே ”பாகுபலி 2” முதல் நாளில் ரூ. 19 கோடி வசூல் செய்து இருந்தது. மெர்சல் படம் முதல் நாளில் தமிழகம் முழுவதும் ரூ. 24.8 கோடி வசூல் செய்து இருந்தது. கடந்த காலங்களில் ரஜினியின் பட வசூலுடன் விஜய்யின் பட வசூலை ஒப்பிடும்போது, சர்கார் படம் தற்போது வசூல் ராஜாவாக உள்ளது. இது ”சர்கார் ராஜா”வாக அவரை மாற்றுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
இதன் மூலம் விஜய்யின் மார்க்கெட் ரேட்டும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அரசியல் தலைவருக்கான வெற்றிடம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், நடிகர் கமல் ஹாசன் அரசியல் கட்சி துவக்கி அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ”அரசியலுக்கு வந்துவிட்டேன். தேர்தலில் போட்டியிடுவேன்” என்று ரஜினிகாந்த் அறிவித்து இருந்தார். ஆனால், எப்போது கட்சி துவக்கம் போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.
அரசியலுக்கு வர விஜய்க்கு ஆதரவு:
இந்த நிலையில்தான் நடிகர் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அவருக்கு ஆதரவானவர்களும் ஏன் அவர் அரசியலுக்கு வரக் கூடாது என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். விஜய்யின் தந்தையும் கண்டிப்பாக விஜய் அரசியலுக்கு வருவார் என்று கூறி வருகிறார்.
திரைப்படம் பொழுதுபோக்கிற்கானது:
திரைப்படம் என்பது பொழுதுபோக்கிற்காக என்று இருந்தது. இன்று அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கத் துவங்கி விட்டனர். அதுவும் ரஜினிகாந்த்துக்குப் பின்னர் பஞ்ச் டயலாக் மற்றும் அரசியல் வசனங்கள் பேசுபவர் விஜய் என்ற முத்திரை குத்தப்பட்டு அந்த கண்ணோட்டத்திலேயே அவரை பார்க்குமாறு ஆகிவிட்டது.
மெர்சல் பீவர்:
மெர்சல் படத்தில் டாக்டராக விஜய் நடித்து சமூகத்திற்கு தேவையான வசனங்கள் பேசி இருப்பார். அந்தப் படத்தில் அவர் பேசி இருந்த ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. சர்கார் படத்தில் நிர்வாகியாக வருகிறார். இந்தப் படத்திலும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழக தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தற்போது கொளுத்திப் போட்டுள்ளார். மெர்சல் படம்தான் அரசியலுக்கு விஜய் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.
லாஜிக் வேண்டும்:
படத்தை படமாக பார்க்க வேண்டும். சமுதாயத்தில் இருக்கும் குறைகளை படத்தின் மூலம் கூறுவதில் தவறு ஒன்றும் இல்லை. அதை எதிர்கொள்ளும் சக்தி அரசியல்வாதிகளிடம் இருக்க வேண்டும். ஆனால், படத்தில் கூறப்படும் கருத்துக்களும் லாஜிக்குடன் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். எந்த லாஜிக்கும் இல்லாமல் எடுத்தால், அது நகைச் சுவைக்கு தள்ளப்படும். அதுபோன்ற சில காட்சிகள் சர்காரில் இடம் பெற்றுள்ளது.
தமிழ் திரையுலகில் இருந்து வந்தவர்கள்தான் தமிழகத்தை ஆட்சி செய்தும் உள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மரணத்திற்குப் பின்னர் இருக்கும் வெற்றிடத்தை யார் நிரப்ப உள்ளனர் என்று பார்க்கும்போது விஜய்க்கு அதிக வரவேற்பு உள்ளது. அரசியல் என்பதும் எளிதானது அல்ல.
அரசியலில் பின்பலம் தேவை:
சினிமாவில் இருந்து கொண்டே அரசியலில் எம்ஜிஆர் பயணித்தார் என்றால், அவர் அண்ணாதுரையுடன் இணக்கமாக இருந்தார். அரசியல் மேடைகளில் தோன்றினார். தனக்கு என அந்த மேடையை பின்னாட்களில் பயன்படுத்திக் கொண்டார். திமுகவில் இருந்தார். பின் நாட்களில் அதிமுக என்ற கட்சியைத் துவக்கினார். இவரைப் பின்பற்றி வந்த ஜெயலலிதாவும், எம்ஜிஆருடன் பயணித்து மக்களின் ஆதரவைப் பெற்றார். பின்பலமாக கட்சியும் இருந்தது. இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசமின்றி தமிழக மக்களின் ஆதரவும் இருந்தது.
நடிப்பதால் அரசியலுக்கு வர முடியுமா?
ஆனால், இன்றைய நிலைமை வேறு. விஜய் அரசியலுக்கு வர வேண்டுமானால் கட்சி தொடங்க வேண்டும். அரசியல்வாதிகளை எதிர்கொள்ள வேண்டும். களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். படத்தில் நடிப்பதன் மூலம் அரசியலுக்கு வந்து விடலாம் என்று எண்ணுவதும் எளிதானது இல்லை.
அரசியல் படங்கள் மட்டுமே பேசப்படும்:
ரசிகர்களின் பார்வையில் நன்றாக இருக்கும் மெர்சலும், சர்க்காரும் ”காமன்மேனின்” பார்வையில் வேறு விதமாக இருக்கலாம். அரசியல் வாடை இருக்கும் படங்களை எடுத்தால்தான் ரசிகர்களைக் கவர முடியும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட படமாக இவை இரண்டும் பார்க்கப்படுகின்றன. அந்த மாதிரி படங்களை விஜய்க்காக எடுக்கும் வரைதான் அவருக்கும் ரசிகர்களிடம் மவுசு இருக்கும். இல்லையென்றால் மற்ற நடிகர்களின் படங்களில் ஒன்றாக பேசப்படும்.
தற்போதைய நிலையில் அவ்வளவு எளிதில் விஜய் தமிழக அரசியல் கதவை தட்டுவார் என்ற நம்பிக்கை இல்லை. ஆழம் பார்த்தே அடி வைப்பார் என்று கருதப்படுகிறது. தற்போது கார்பரேட்டாக அரசியல் மாறினாலும், மக்களுக்காக என்ன செய்யவுள்ளார் என்ற எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தே வரவேண்டும். பொறுத்திருந்து பார்க்கலாம், இந்தக் களம் விஜய்க்கானதா என்று.