வெளிநாட்டில் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஜிம்பாப்வே அணி வெற்றி வங்காளதேசத்தை வீழ்த்தியது
ஜிம்பாப்வே–வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சியல்ஹெட்டில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி 282 ரன்னும், வங்காளதேச அணி 143 ரன்னும் எடுத்தன. இதனை அடுத்து 139 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி 181 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. பின்னர் 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2–வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 3–வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று முன்தினம் 4–வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 2–வது இன்னிங்சில் 63.1 ஓவர்களில் 169 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் ஜிம்பாப்வே அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இம்ருஸ் கெய்ஸ் 43 ரன்னும், அரிபுல் ஹக் 38 ரன்னும் எடுத்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் பிரன்டன் மவுதா 4 விக்கெட்டும், சிக்கந்தர் ராசா 3 விக்கெட்டும், வெலிங்டன் மசகட்சா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். ஜிம்பாப்வே அணி வீரர் சீன் வில்லியம்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
ஜிம்பாப்வே அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்டு இருக்கிறது. கடைசியாக அந்த அணி 2001–ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சிட்டகாங்கில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. ஒட்டுமொத்தத்தில் வெளிநாட்டு மண்ணில் அந்த அணியின் 3–வது வெற்றி இதுவாகும். அத்துடன் கடந்த 5 ஆண்டுகளில் ஜிம்பாப்வே அணி டெஸ்ட் போட்டியில் பெற்ற முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணி போட்டி தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் வருகிற 11–ந் தேதி தொடங்குகிறது.