தமிழகத்தை நோக்கி நகரும் ‘கஜா’ புயல் கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று அறிவிப்பு
வங்க கடல் பகுதியில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின்னர் புயலாக மாறியது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று (நேற்று முன்தினம்) நிலை கொண்டு இருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று (அதாவது நேற்று) காலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த புயல் மாலை 4 மணி அளவில் சென்னைக்கு வட கிழக்கே சுமார் 860 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு இருந்தது. மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் வட தமிழகத்தை நோக்கி மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இந்த புயல் கடலூருக்கும், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே வருகிற 15-ந் தேதி (வியாழக்கிழமை) முற்பகலில் கரையை கடக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலூருக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 400 கிலோ மீட்டர் ஆகும். பெரும்பாலும் வட தமிழக பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.
கஜா புயல் காரணமாக வருகிற 14-ந் தேதி (புதன்கிழமை) இரவு முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அந்த நேரத்தில் கடல் கொந்தளிப்பாக காணப்படும்.
எனவே மீனவர்கள் திங்கட்கிழமை (இன்று) முதல் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் திங்கட் கிழமைக்குள் (இன்று) கரை திரும்புமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
14-ந் தேதி புயல் கரையை நெருங்கும் என்பதால் அன்று இரவு முதல் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 15-ந் தேதி இதே பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும்.
வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை புயல் கடந்து செல்லும்போது, உள் தமிழகத்திலும் மழை இருக்கும்.
தற்போதைய நிலவரப்படி கஜா வலு இழக்காமல் புயலாகவே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. என்றாலும் இது தீவிர புயலாக வலுப்பெறவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி தீவிர புயலாக மாறும்போதுதான் அது எந்த இடத்தில் கரையை கடக்கும் என்பதை கணிக்க முடியும்.
தாழ்வு மண்டலமாக இருக்கும் போது தான் மழை பெய்யும், புயலாக வந்தால் மழை இருக்காது என்று நினைக்க வேண்டாம். புயல் வரும் போதும் மழை இருக்கும். சென்னையை பொறுத்தவரையில் 14, 15-ந் தேதிகளில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் மழை அல்லது மிக கனமழை இருக்கும். அப்போது பலத்த காற்று வீசும். ஏற்கனவே 2016-ம் ஆண்டு சென்னையை தாக்கிய வார்தா புயலை போல் இந்த கஜா புயலும் இருக்க வாய்ப்பு உள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் தற்போது (நேற்று) வரை தமிழகத்தில் 26 செ.மீ. மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால் 20 செ.மீ. தான் மழை பெய்து இருக்கிறது. இது இயல்பை விட 23 சதவீதம் குறைவு ஆகும். வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை இருக்கிறது. இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.
புயல் கரையை நோக்கி நகர்ந்து வருவதால், இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்துக்கு சிவப்பு எச்சரிக்கை (‘ரெட் அலர்ட்’) விடுத்து இருந்தது.
இதுகுறித்து பாலச்சந்திரனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:- இந்திய தேசிய வானிலை மையம் தமிழகத்துக்கு ‘ரெட் அலர்ட்’ விடுத்து இருக்கிறது. இந்த ‘ரெட் அலர்ட்’ தமிழகம் முழுவதற்குமான எச்சரிக்கை கிடையாது. நிர்வாகத்துக்காக வானிலை ஆய்வு மையத்தால் தரப்படக்கூடிய ஒரு அறிவிப்பு. மாநில அரசு உடனே அதற்கு தயாராகிக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த அறிவிப்பு வழங்கப்படுகிறது. வட தமிழக கடலோர மாவட்டங்களில்தான் (சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை) கனமழை பெய்யும். இந்த பகுதிகளுக்குத்தான் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு இருக்கிறது.
எனவே தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை. மாநில அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு இருக்கிறது. மழை காலங்களில் மட்டும் அல்ல, கோடை காலத்திலும் கடும் வெயில் தொடர்பாக ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்படும் வழக்கம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று காலை வரை தமிழகத்துக்கு மட்டும் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு இருந்த நிலையில், பிற்பகல் 3 மணிக்கு பிறகு ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திர பகுதிகளுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பை வெளியிட்டது.
புயல் கரையை நெருங்கி வருவதையொட்டி எண்ணூர், கடலூர், தூத்துக்குடி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
‘கஜா’ புயல் கடலூர்-ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்து இருப்பதை தொடர்ந்து, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், புயல் கரையை கடக்கும் போது பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கனமழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண பணிகள் போன்றவை குறித்து ஆலோசிக்க இருக்கின்றனர்.
இந்த கூட்டத்தில் பேரிடர் மேலாண்மைத்துறை உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள்.
கஜா புயல் நேற்று இரவு 11 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு மற்றும் வடகிழக்கே 840 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு இருப்பதாகவும், அது மெதுவாக நகர்ந்து வருவதாகவும் சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த புயல் 15-ந் தேதி மதியம் சென்னைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கஜா புயல் கடலூருக்கும், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக அனைத்து கடலோர மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். அத்துடன் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை செய்யப்பட்டு உள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த மீன்பிடிக்க தடை தொடரும். புயல் குறித்து அனைத்து மீனவர்களுக்கும் தகவல் தெரிவிக்க பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சென்னையில் கட்டுப்பாட்டு அறையும் செயல்பட்டு வருகிறது. மேற்கண்ட தகவலை தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.