‘துரோகிகள் யார் என்று மக்களுக்கு தெரியும்’ டி.டி.வி.தினகரன் பேட்டி
அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தேனி மாவட்டம், போடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
துரோகிகள் யார் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்தது போல், உண்ட வீட்டுக்கே துரோகம் செய்தது போல், சாப்பிட்ட கை காயும் முன்பே தன்னை முதல்-அமைச்சர் ஆக்கியவருக்கு பதவிவெறியில் துரோகம் செய்து விட்டு வடக்கே உள்ளவர்களுக்கு அடிமை சேவகம் செய்வது யார் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். மக்கள் துரோகி யார் என்பதும், அம்மாவின் தொண்டர்களின் துரோகி யார் என்பதும் எல்லோருக்கும் தெரியும். தேர்தல் வரும் காலத்தில் மக்கள் அவர்களுக்கு வெளிப்படுத்துவார்கள்.
எடப்பாடி பழனிசாமி யாரால் முதல்-அமைச்சர் ஆனார் என்பது மக்கள் எல்லோருக்கும் தெரியும். சசிகலாவால் தான் அவர் முதல்-அமைச்சர் ஆனார். கடந்த ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனதும் நம்பிக்கை தீர்மானத்தில் அவருக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் தான் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள 18 எம்.எல்.ஏ.க்களும். ஆனால், அவருக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 பேரும் அவருக்கு வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள்.
அவரை (எடப்பாடி பழனிசாமி) முதல்-அமைச்சர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று சொன்னதால் தகுதிநீக்கம் செய்த எம்.எல்.ஏ.க்களை ஜெயலலிதாவின் ஆன்மா பழி வாங்கிவிட்டதாக கூறுகிறார். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இறுதியில் தர்மமே வெல்லும்.
எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று சொன்னதற்காக ஜெயலலிதாவுக்கு வாக்களித்த மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை வழங்காமல் உள்ளனர். மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் உண்ணாவிரத போராட்டங்களை நடத்துகிறோம்.
மக்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து விட்டதாக முதல்-அமைச்சர் தவறான செய்திகளை சொல்லி வருகிறார். மக்கள் விரும்பாத திட்டங்களைதான் நடைமுறைப்படுத்துகிறார்கள். இங்கு நடப்பது சுயநலவாதிகளின் ஆட்சி. மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் அமைச்சர்கள், தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுப்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அவர்களின் பேச்சில் உள்ள பொய்யை பார்த்து இப்படி எல்லாம் பொய் சொல்ல முடியுமா? இப்படி எல்லாம் துரோகம் செய்ய முடியுமா? என்று மக்கள் கேட்டுக் கொண்டு அமைதியாக காத்திருக்கிறார்கள். இந்த அமைதி புரட்சி தேர்தல் நேரத்தில் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.