Breaking News
அனைத்து மதத்தினரும் செல்லலாம்: சபரிமலை அய்யப்பன் கோவில் மதச்சார்பற்றது – ஐகோர்ட்டில் கேரள அரசு தகவல்

பா.ஜனதாவை சேர்ந்த பிரமுகர் டி.ஜி.மோகன்தாஸ் என்பவர் கேரள ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்துக்கள் அல்லாதவர்களையும், சிலையை வழிபடாதவர்களையும் அனுமதிப்பதை தடுக்கவேண்டும் என்று கோரி இருந்தார்.

மேலும் இது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கும், 1965-ம் ஆண்டின் கேரள அரசின் பொது இடங்கள் வழிபாட்டு நுழைவு அங்கீகார சட்டத்துக்கும் எதிரானது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான கேரள அரசு ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறி இருப்பதாவது:-

சபரிமலை அய்யப்பன் கோவில் ஆதிகாலத்தில் பழங்குடியினர் வழிபடும் இடமாக இருந்தது என்று வெளிப்படையாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சரணம் அய்யப்பா என்று கோஷத்தில் உள்ள சரணம், புத்த மதத்தில் இருந்து வந்தது என்ற சிந்தனையும் உள்ளது.

வரலாற்று ரீதியாக சபரிமலை கோவில் மதச்சார்ப்பற்றது. எனவே அங்கு சாதி, மதத்தை காரணம் காட்டி யாருக்கும் அனுமதி மறுக்கக்கூடாது. அங்கு அனைத்து மதத்தினரும் செல்லலாம். அய்யப்பனின் நண்பராக கூறப்படும் வாவருக்கு, சபரிமலை சன்னிதானத்தில் தனி இடம் உள்ளது. வாவரை வழிபட இங்கு ஏராளமான முஸ்லிம்களும் வருகிறார்கள். அவர்கள் அய்யப்பனையும் வழிபடுகின்றனர்.

சபரிமலைக்கு வரும் வழியில் உள்ள எருமேலியில் வாவர் பள்ளி என்னும் ஒரு மசூதியும் உள்ளது. இங்கு அனைத்து அய்யப்ப பக்தர்களும் சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். மேலும் பேட்டை துள்ளல் என்னும் நிகழ்ச்சியும் இங்கிருந்தே தொடங்குகிறது. பிறப்பால் கிறிஸ்தவரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய ஹரிவராசனம் பாடல்தான் அய்யப்பனின் தாலாட்டு பாடலாகவும் உள்ளது. அய்யப்ப பக்தரான அவரும் சபரிமலைக்கு அவ்வப்போது சென்று வருகிறார்.

இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சபரிமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர். எனவே மனுதாரரின் வேண்டுகோளை நிராகரிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.